சிந்து தந்த சிந்தாமணி

முரசு அஞ்சலில் உள்ள எழுத்துருக்கள் அனைத்தையும் புதுப்பித்துக் கொண்டிருக்கிறேன் என்பது பலருக்குத் தெரியும். எப்போது வெளிவரும் என்று நீங்கள் கேட்கும்முன், வழக்கம் போல ‘விரைவில்’ என்று மட்டும் கூறி, இன்றைய கதைக்கு வருகிறேன்.

இப்போது உள்ள முரசு அஞ்சலில் சில எழுத்துருக்கள் 80களில் வடிவமைக்கப்பெற்றவை. சில 90களில்; இன்னும் சில 2000களின் தொடக்கத்தில் வடிவமைக்கப்பெற்றவை. இந்த 2000களின் வரிசையில் சேர்ந்ததுதான் பலராலும் பயன்படுத்தப்பட்டு வரும் ‘சிந்து’.

அப்போது மலேசியக் கல்வி அமைச்சின் முரசு அஞ்சல் திட்டம் ஒன்றுக்கு உடனடியாகச் சில கூடுதல் தமிழ் எழுத்துருக்கள் தேவைப்பட்டன. நான் மட்டும் அத்தனை வடிவங்களையும் வரைவு (sketch) முதல் செதுக்கி எடுக்க வேண்டும் என்றால் நேரம் போதாது. அதனால், சென்னையில் இருக்கும் என் அருமை நண்பர் நாணாவின் உதவியை நாடினேன். சில வடிவங்களில், சில எழுத்துகளை, சில நாள்களில் வரைந்து அனுப்பினார். பொருத்தமான சிலவற்றை மட்டும் தேர்ந்தெடுத்து, முழுமையான எழுத்துருக்களாக அவற்றை உருவாக்கி முரசு அஞ்சலில் சேர்த்தேன். நாணா வரைந்தனுப்பிய வடிவங்களுக்கான தொகையையும் அவருக்கு அனுப்பி வைத்தேன்.

அவர் அதனை எதிர்பார்க்கவில்லை; ஏற்கவும் மறுத்தார். “கலைஞன் அல்லவா நான். கலையைக் கலை இழிவு படுத்துமா நண்பா?” என்று கர்ணன் திரைப்பட வரிகளை இரவல் வாங்கி அவரிடம் விட்டேன். சிரித்தார். ஏற்றார். மகிழ்ந்தோம்!

நாணா வரைந்தனுப்பிய வடிவங்களில் கிடைத்த முத்துகளில் ஒன்றுதான் சிந்து!

படம் 1: நாணாவுடன் (நிற்பவர்) முத்து நெடுமாறன் (அமர்ந்திருப்பவர்)

இருபது ஆண்டுகளுக்குமுன் எழுத்துருவாக்கம் பற்றி எனக்கிருந்த புரிதல் மிக மிகக் குறைவு. எனக்குத் தெரிந்த அனைத்துமே நானாகத் தேடிக் கற்றதே. ஆலையில்லாத ஊரில் இலுப்பைப் பூவைப்போல, தமிழ் எழுத்துருவாக்கத்தில் சர்க்கரையைச் சேர்த்துக் கொண்டிருந்தேன். தமிழ் எழுத்துருவாக்கத்திற்கு உதவும் செயலிகளும் அப்போது மிகக் குறைவாகவே இருந்தன. இருந்தவற்றைக் கொண்டு என்னென்ன செய்ய முடியுமோ அவற்றைச் செய்தேன். நானும் ஒரு பொறியியலாளன் என்பதால் சில செயலிகளை நானே உருவாக்கிக் கொண்டேன்.

இருபது ஆண்டுகளுக்குப்பின், சிந்துவை மேம்படுத்த இப்போதுள்ள எழுத்துருவாக்கச் செயலி ஒன்றில் அதனைத் திறந்து பார்த்தேன். அப்போது தென்படாத குறைபாடுகள் இப்போது பளிச்சென்று தெரிந்தன. அன்றாடப் பயன்பாட்டில் இந்தக் குறைகள் குறைகளாகவே தெரியா. ஆனால் இப்போது நான் ஒரு தொழில்முறை எழுத்துருவியலாளன். இவை மிகத் தெளிவாகவே எனக்குத் தெரிந்தன; கண்களை உறுத்தின. உடனே சீர்படுத்தும் வேலையில் இறங்கினேன். ஒருசில மாற்றங்களை மட்டும் இங்கே விளக்குகிறேன்.

நேராக இல்லா எழுத்துகளின் உயரமும் கோடுகளும்

படம் 2: உயர வேறுபாடு, நேராக இல்லாக் கோடு, அடிக்கோட்டில் அமராத எழுத்து.

படம் 2-இல் உள்ள ‘ப’ எழுத்துக்கும் ‘பி’ எழுத்தில் உள்ள ‘ப’ பகுதிக்கும் உயர வேறுபாடு உள்ளதைக் காணலாம். இந்த வேறுபாடுகளை, பெரிய எழுத்தளவிலும், ஆப்பிள் கணினிகளின் மிகக்கூர்மையானத் திரைகளிலும், அச்சுப் படிவங்களிலும் காண்பது சற்றுக் கடினம். ஆனால், கூர்மை குறைந்த திரைகளில், சிறிய எழுத்தளவில் இந்த வேறுபாட்டைச் சற்றுத் தெளிவாகக் காணலாம். கூர்மை குறைந்த திரைகளில் புள்ளிகளின் (pixel) எண்ணிக்கை குறைவு. குறைந்த புள்ளிகளின் எண்ணிக்கையில், இந்த வேறுபாடுகள் மிகைப்படுத்தப்படுவதுபோல் தோன்றும்.

உகர, ஊகாரச் சுழி

படம் 3: ஞ எழுத்தும் அதில் உள்ள கீழ்ச் சுழியைக் கொண்டுள்ள மற்ற எழுத்துகளும்.

படம் 3-இல் மூன்று வகையான சீரின்மைகளைத் தெளிவாகக் காணலாம். முதலாவது, கீழே செல்லும் சுழியின் ஆழம் எழுத்துக்கு எழுத்து மாறுபட்டுள்ளது. இரண்டாவது, குழிகள் யாவும் ஒரே இடத்தில் முடிவுறவில்லை. குறிப்பாக ஞ, ளு, ஸ்ரீ ஆகியவைற்றின் கீழ் இழுப்புகள், மற்ற எழுத்துகளில் உள்ளவற்றப்போல் மேலே செல்லாமல், பாதியிலேயே நின்றுவிடுகின்றன. மூன்றாவது, கீழிழுப்பின் தடிமங்கள் எல்லா எழுத்துகளுக்கும் வெவ்வேறாக உள்ளன. இவற்றைச் சரிசெய்து சீர்படுத்துவதே மேம்பாட்டு வேலைகளில் அதிக நேரம் எடுத்துக்கொண்ட பணியாக இருந்தது.

எழுத்துகளுக்கிடையே உள்ள இடவெளி

சிந்துவில், எழுத்துகளுக்கிடையே உள்ள இடவெளி சற்று நெருக்கமாகவே இருந்தது. தலைப்புகளுக்காகப் பயன்படுத்தப்படும் எழுத்துரு என்பதால் அது மிகப் பெரிய ஒரு குறையாகத் தெரியவில்லை. இருந்தாலும் அதிகமான சொற்கள் அடங்கிய வரிகள், சிந்துவில் காட்டப்படும்போது, படிப்பதற்குச் சற்று சிரமத்தை ஏற்படுத்தும். எனவே இந்த இடவெளியைச் சற்று விரிவாக்கி, நல்ல ‘காற்றோட்டத்திற்கு’ வழிவகுக்க வேண்டி இருந்தது.

இகரக் கொக்கி

நேர்க் கோடுகளும், சீரான வளைவுகளையும் கொண்ட சிந்துவின் எழுத்துகளில், இகரக் கொக்கி மட்டும் சற்று மாறுபட்டிருந்தது. எல்லா எழுத்துகளையும் விட, இதில் தேவைக்கும் அதிகமான வளைவுகள் இருப்பதுபோல் தோன்றியது. ஈகாரக் கொக்கி கூட மற்ற எழுத்துகளோடு ஓரளவு இசைந்து போகின்றது. ஆனால் இகாரக் கொக்கி மட்டும், பார்வையைத் தன் பக்கம் ஈர்ப்பது போன்ற தனித்துவத்தை கொண்டிருந்தது.

இதன் வடிவத்தையும் சீர் படுத்திவிடலாமா என்று எண்ணியபோது, சிந்துவின் தனித்துவமே இந்த இகரக் கொக்கிதான் என்றும் தோன்றியது. எவ்வளவு தொலைவில் இருந்து பார்த்தாலும் சிந்துவைத் தனியாகக் காட்டுவது இந்த இகரக் கொக்கிதான். அதனால் மாற்ற மனமில்லை. ஆனால் எல்லா எழுத்திலும் இகரம் சீராக இருக்கவேண்டுமே? அதனையாவது செய்யலாமே என்று நினைத்தேன். அப்போதும் ஒரு தெளிவு கிடைக்கவில்லை.

படம் 4: சீரில்லா இகரக் கொக்கிகள்
படம் 5: சிந்து – மேம்பாட்டிற்கு முன்பும் பின்பும்

புதிய எழுத்துரு

சீர்மை, உருமாற்றம் என்று பலவாறான கற்பனையில் வடிவங்களை வைத்து விளையாடிக் கொண்டிருந்தேன். அடிப்படை எழுத்துகளிலும் இகரக் கொக்கியின் வளைவுகளைச் சேர்த்தால் எப்படி இருக்கும் என்று க, ப, ல, ன போன்ற எழுத்துகளையும் மறுவடிவமைப்புச் செய்து பார்த்தேன். புதிதாக ஓர் எழுத்துரு பிறந்தது!

சிந்துவின் மேம்பாட்டைச் சற்று நிறுத்திவிட்டு, புதிய விளையாட்டுப்பொருள் கிடைத்த குழந்தைபோல், புதிய எழுத்துருவை உருவாக்க, அவசர அவசரமாகத் தொடங்கினேன். கற்பனை ஓட்டம் எனது புதிய எம்-2 மெக் கணினியைவிட மிக வேகமாகச் சென்று கொண்டிருந்தது. ஒவ்வோர் எழுத்தையும் முதலில் இருந்து வரைந்தெடுக்க எனக்குப் பொறுமை இல்லை. சிந்துவை அப்படியே நகலெடுத்து, நகலில் உள்ள எழுத்துகளை மாற்றினேன். இந்த உருமாற்றத்தில் எனக்கிருந்த உற்சாகத்திற்கு அளவே இல்லை. மூன்றே நாள்களில் முன்னூறு வடிவங்களை முடித்தேன். பல புதிய சேர்க்கைகள். சில தொழில்நுட்பக் கூறுகள். யார் பார்த்தாலும் இந்தப் புதிய எழுத்துருவுக்கும் சிந்துவுக்கும் தொடர்புண்டு என்று நம்பவே மாட்டார்கள். சிந்துவை அதிகம் பயன்படுத்துவோர்கூட.

இந்தக் கதையை நான் கூறவில்லை என்றால், புதிய எழுத்துரு புதிய எழுத்துருவாகவே இருந்திருக்கும். ஆனால் எனக்கு இது சுவை மிகுந்த கதை என்பதால் பகிராமல் இருக்க முடியவில்லை.

புதிய எழுத்துருவுக்குப் புதிய பெயர் வைக்க வேண்டும் அல்லவா? எமது தமிழ் எழுத்துருக்கள் அனைத்திற்கும் பிறமொழி கலக்காத தமிழ்ப் பெயர்களையே வைக்கவேண்டும் என்பது எனது ஆவல். சிந்து அதற்கு விதிவிலக்கு. சிந்து நாணாவின் மகளுடைய பெயர். மகளின் அருமையை நன்கு உணர்ந்தவன் நான். அதனால் நாணாவின் சிந்துவைச் சிந்துவாகவே வைத்துவிட்டேன்.

ஆனால் புதிய எழுத்துருவுக்கு முற்றாக வேறு பெயரை வைத்துவிடலாமே? மனம் கேட்கவில்லை. சிந்துவில் இருந்து வந்தது என்று யாருக்கும் தெரியாவிட்டாலும் எனக்குத் தெரியுமே! சிந்துவையும் விட முடியாது, முழுமையான தமிழ்ப் பெயராகவும் இருக்கவேண்டும். என்ன செய்யலாம்?

நான் வைத்த பெயர், அதே புதிய எழுத்துருவில் இதோ படத்தில் ….

படம் 6: சிந்தாமணி எழுத்துரு

சிந்தாமணி குறித்து நிறைய சொல்லலாம். வெளியீட்டு விழாவில் சொல்வதற்கும் சில புதிய செய்திகள் வேண்டும் அல்லவா?

தொடர்புடையவை:

  1. எழுத்தோவியம் எழுத்துரு ஆகும் கதை
  2. கையெழுத்தை எழுத்துருவாக்குதல்!

One comment

  1. அருமையான பதிவு. இரண்டு ஜாம்பவான்கள் சேர்ந்து கணித்தமிழுக்கு செய்யும் புதுமை இது. பகிர்வுக்கு நன்றி.

Leave a Reply