கையெழுத்தை எழுத்துருவாக்குதல்!

கலைநயம் நிறைந்த கையெழுத்துகள் எழுத்துருவாக்கத்திற்கு மிகுந்த உள்ளுயிர்ப்பை வழங்கக்கூடியவை. ஆனால் கையெழுத்துகளை அப்படியே கணினிக்கான எழுத்துருக்களாக மாற்றிவிட முடியாது. எழுதுகோலைக்கொண்டு எழுதப்பட்ட எழுத்துகளுக்கு அழகு சேர்க்கும் கூறுகள், எழுத்துகளோடு சேர்ந்து கணினிக்குள் வரா.

பயன்படுத்தப்பட்ட மை, எழுதப்பட்டத் தாள், ஒரே இழுப்பில் மாறிமாறி வரும் அழுத்தங்கள் – இவை அனைத்தும் எழுத்தின் அழகுக்கு அணிசேர்ப்பவை. இந்தத் தன்மைகளைக் கணினிக்குள் கொண்டுவருவது கடினம். கையெழுத்தின் அழகு, அது எழுத்துருவாக உருவாக்கப்பட்டு கணினிக்குள் வந்ததும் உடனே மாறிவிடும்.

மேலும், கையெழுத்தை நாம் பார்த்து சுவைக்கும்போது ஏற்படும் உணர்வுகள் வேறு. முன்கூட்டிய எதிர்ப்பார்ப்புகள் இருக்காது. இருப்பதை இருந்தவாறே பார்த்து மகிழ்வோம். கணினி எழுத்துருவில் அப்படி அல்ல. முன்கூட்டிய எதிர்பார்ப்புகள் அதிகம் இருக்கும். பயன்படுத்தப்படும் இடங்களும் நோக்கங்களும் மாறுபடும். அளவு கூட மாறும். கையெழுத்தை எழுத்துருவாகக் கொண்டுவரும்போது, அதன் வடிவங்களில் இவற்றுக்காகச் சில மாற்றங்களைச் செய்தே ஆகவேண்டி இருக்கும். நான் அண்மையில் உருவாக்கிய புதிய கையெழுத்து எழுத்துருவிலும் அப்படிப்பட்ட மாற்றங்களைச் செய்ய வேண்டியிருந்தது. சீன வனப்பெழுத்துக்கான தூரிகையைக் கொண்டு, தமிழ் எழுத்துகளை எழுத்தாணியைக் கொண்டு எழுதுவதுபோல் எழுதினால் எப்படிப்பட்ட வடிவங்கள் தோன்றும் என்று கற்பனை செய்து பார்த்தேன். அதன் விளைவுதான் இந்தப் புதிய எழுத்துரு.

கையெழுத்தை எழுத்துருவாக்குதல் - figure 1
கையெழுத்தை எழுத்துருவாக்குதல் – ஒரு முயற்சி!

சிறப்புக் கூறுகள்

எழுத்துருக்களைப் பயன்படுத்தும் பயணர்களின் விருப்பங்களும் தேர்வுகளும் ஒரே வகையாக இருப்பதில்லை. ஒருவருக்கொருவர் மாறுபட்டிருக்கும். இது தமிழுக்கு மட்டுமல்ல, எல்லா வரிவடிவங்களுக்கும் பொருந்தும். இலத்தீன் எழுத்துருக்களில் a, g எழுத்துகளின் வடிவங்களில் வேறுபாடுகள் உள்ளன. இவற்றுள் ஒரு வடிவமே இயல்பான வடிவமாக இருக்கும் – இருக்க முடியும். மாற்றுவடிவம் தேவையெனில், எழுத்துருவின் சிறப்புக் கூறுகளை நாடவேண்டும்.

தமிழிலும் அவ்வாறு சிறப்புக் கூறுகளைச் சேர்க்கலாம். என்னுடைய எழுத்துருக்களி நான் சேர்த்து வரும் சிறப்புக் கூறு ‘வரலாற்று வடிவங்கள்’ என்று அழைக்கப்படும் னை, லை, ளை, ணை, றா, ணா, னா ஆகி ஏழு எழுத்துகளின் வடிவங்கள். எழுத்துரு நுட்பத்தில் Historical Ligatures என்றழைக்கப்படும் சிறப்புக் கூறையே ‘வரலாற்று வடிவங்கள்’ என்று தமிழில் அழைக்கிறேன்.

தமிழ் வரலாற்று வடிவங்கள்

தமிழ் வரிவடிவத்தில் ல, ள, ண, ன எழுத்துகளுக்குமுன் வரும் ஐகாரக் குறியீடு 1978ஆம் ஆண்டு மாற்றப்பட்டது. யானையின் தும்பிக்கை போன்று தோற்றமளிக்கும் அழகான வடிவம். அதேபோல, ணா, றா, னா எழுத்துகளுக்கான வடிவங்களும் மாற்றப்பட்டன. இவற்றின் முந்தைய வடிவங்களுக்கு துணைக்கால் இருக்காது. இழுப்புகள் கீழே இறங்கி, இடதுபுறம் சென்று முடிவுறும். இப்போதும் பலர் கையில் எழுதும்போது, 1978க்குமுன் இருந்த வடிவங்களையே எழுதுவர். நானும் மிக அண்மை காலம் வரை அப்படித்தான் எழுதினேன்.

எமது இணைமதி எழுத்துருவை 2002ஆம் ஆண்டு முதன் முதலில் ஆப்பிள் கணினிகளுக்காகத் திருத்தியமைக்கும்போது, அதில் இந்த வடிவங்களும் சேர்க்கப்பட வேண்டிய தேவை இருந்தது. இருவடிவங்களையும் ஒரே எழுத்துருவில் சேர்க்கலாம் என்பதையும், ‘வரலாற்று வடிவங்கள்’ எனும் ஒரு பாங்கு (feature), எழுத்துரு தொழில்நுட்பத்தில் உண்டு என்பதையும் அப்போதுதான் தெரிந்து கொண்டேன்.

இந்தப் பாங்கின் கீழ் சேர்க்கப்படும் வடிவங்கள் இயல்பாகத் தோன்றா. ஆனால் பயனர்கள் அவற்றை எளிதாகத் தோற்றுவிக்கலாம். ‘லை, ணை … றா, னா ஆகிய எழுத்துகள் 1978ஆம் ஆண்டுக்குமுன் இப்படித்தான் எழுதப்பட்டன’ என்று எழுதுவதற்காவது இந்த வடிவங்கள் தேவை அல்லவா? இணைமதியில் சேர்க்கப்பட்ட நாள் முதல் நான் உருவாக்கிவரும் எல்லா புதிய தமிழ் எழுத்துருக்களிலும் இந்த அழகான வடிவங்களைத் தவறாமல் சேர்த்து வருகிறேன். இந்தப் புதிய கையெழுத்து எழுத்துருவிலும் இவற்றை விடவில்லை.

வரலாற்று வடிவங்கள் – எழுத்துருவில் உள்ள ஒரு பாங்கு (feature)

இருமொழிச் சூழலில் எழுத்தமைதி

தமிழில் எழுதிக்கொண்டிருக்கும்போது சிலவேளைகளில் ஆங்கில சொற்களை இடையிடையே சேர்க்கவேண்டியத் தேவை ஏற்படும். இவை மலாய் சொற்களாகவோ, மற்ற ஐரோப்பிய மொழி சொற்களாகவோ கூட இருக்கலாம். தமிழுக்காக உருவாக்கப்பட்ட எழுத்துருக்களில் ஆங்கில எழுத்துக்களுக்கான வடிவங்கள் பெரும்பாலும் சேர்க்கப்பட்டிருக்காது. அப்படியே சேர்க்கப்பட்டிருந்தாலும், ஏறக்குறைய வடிவ ஒற்றுமையைக் கொண்ட வேறொரு ஆங்கில எழுத்துருவில் இருந்து எடுக்கப்பட்ட வடிவங்களாக இருக்கும். அல்லது, கணினியே ஏதோ ஒரு எழுத்துருவில் இருந்து ஆங்கில எழுத்துகளைச் சேர்த்துவிடும். ஆவணத்தை முடித்தப் பிறகு, ஒரு பார்வை பார்த்தோம் என்றால், தமிழ் எழுத்துருக்களுக்கு சற்றும் பொருந்தாத ஆங்கில வடிவங்கள் தனித்து நிற்பது தெளிவாகத் தெரியும். ‘என்னைப்பார் .. என்னைப்பார்’ என்று நமது கவனத்தை முதலில் பெற முயல்வது போல் இந்த வேற்றுமொழிச் சொற்கள் முந்திக்கொண்டு நிற்கும்.

ஆங்கில ஆவணங்களை எழுதும்போது இடையில் தமிழ் சொற்கள் சேர்க்கப்பட்டாலும் இதே நிலைதான்.

இரண்டு மொழிகளுக்கான எழுத்துருக்களும் வெவ்வேறு நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்டிருக்கலாம். ஒரே நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டிருந்தாலும் எழுத்துகள் எழுதப்படும் முறையும், அவற்றின் வடிவமைப்பும் வெவ்வேறானவை. தமிழ் எழுத்துகளைவிட ஆங்கில எழுத்துகளில் இழுப்புகள் (strokes) குறைவாகவே இருக்கும். எனவே, ஒருமித்த வடிவக்கோட்பாடோடு இருமொழி வடிவங்களை வரைந்தெடுப்பது கடினம். இதுகுறித்து ஒரு ஆய்வு கட்டுரையை எமது முதுகலைத் தேர்வுக்காக சில ஆண்டுகளுக்குமுன் எழுதினேன். அனைத்துலக எழுத்துருவியல் மாநாடு ஒன்றில் ஒரு கட்டுரையையும் படைத்தேன்.

இருவேறு வரிவடிவங்கள் ஒரே ஆவணத்தில் பயன்படுத்தப்படும்போது, படிப்பவரின் கவனத்தை ஈர்க்க இரண்டு வடிவங்களும் ஒன்றோடு ஒன்று போட்டியிடக் கூடாது. நல்லிணக்கம் (harmony) ஏற்பட இரு மொழிகளின் எழுத்துருக்களுக்கான வடிவமைப்பும் முடிந்தவரை ஒரே கட்டமைப்பைக் கொண்டு வரையப்பட்டிருக்க வேண்டும். ஒரு மொழியில் எழுதப்பட்ட ஆவணத்தின் வடிவ அமைதியை, உதவிக்காகச் சேர்க்கப்பட்ட ஓரிரு வேற்றுமொழிச் சொற்கள் குலைத்துவிடக்கூடாது.

இந்த வடிவமைப்பு கடினமான ஒன்று! ஆனால் கடினம் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும் அல்லவா?

இருமொழிப் பனுவலில் எழுத்தமைதி

இதனை விளக்குவதுதான் இந்தப்படம். பனுவலின் முதன்மை மொழி தமிழ். இடையிடையே சில ஆங்கிலச் சொற்கள் ஆங்காங்கே தெளிக்கப்பட்டிருக்கின்றன. அவை உங்கள் கவனத்தை ஈர்க்கப் போட்டியிடுகின்றனவா அல்லது தமிழ் எழுத்துகளோடு அமைதியாகச் செயல்படுகின்றனவா என்று கொஞ்சம் பார்த்துச் சொல்லுங்கள்?

எண்ணும் எழுத்தும்

இன்று நாம் பயன்படுத்தும் எண்களின் வடிவங்கள், இந்தியாவில் இருந்து வந்தவை என்றாலும், அவற்றின் தற்போதைய வடிவங்களுக்கும் இந்திய வரிவடிவங்களுக்கும் தொடர்பே இல்லாமல் போயிற்று. இலத்தீன் எழுத்து வடிவங்களுக்கும் அவை நெருங்கிய தொடர்புடையவை என்றும் சொல்வதற்கில்லை. ஆங்கில வரிகளில் இடையிடே தற்கால எண்கள் வந்தால் அவை தனித்து நிற்பதை நாம் பார்க்கலாம். எழுத்துக்களோடு ஒருமித்து அமைந்திட எண்களுக்கு சில மாற்று வடிவங்களைக் கொடுக்க எழுத்துரு தொழில்நுட்பம் வாய்ப்பளிக்கிறது.

இயல்பான எண்களின் வடிவங்கள் பெரும்பாலும் மேல்கட்ட எழுத்துகளோடு (upper case letters) பொருந்தி இருக்கும். கீழ்க்கட்ட எழுத்துகளுக்காக (lower case letters) பழைய எண் வடிவங்கள் (old style figures) அல்லது கீழ்க்கட்ட வடிவங்கள் என்று ஒரு பாங்கு உள்ளது. இந்த எண்களின் அகலம், வடிவத்திற்கு ஏற்றாற்போல மாறுபடும் (proportionally spaced). பட்டியல்களில் பயன்படுத்தப்படும் எழுத்துக்களோ, ஒரே அகலத்தைக் கொண்டவையாக இருக்கும் (tabular figures).

தமிழ் எண்கள் தமிழ் எழுத்துகளோடு மிக அழகாகப் பொருந்துபவை. சில எண்கள் எழுத்துகளைக் கொண்டே எழுதப்படுகின்றன. இதுபோன்று பல எண்களுகான வடிவத் தொகுதிகள் உள்ளன. இந்தத் தொகுதிகள் அனைத்தும் ஒரே எழுத்துருவில் இருக்கலாம். தேவைக்கேற்ப மாற்று வடிவங்களை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்தப் புதிய கையெழுத்து எழுத்துருவில் உள்ள எண்களின் வெவ்வேறு வடிவங்களை, கீழே உள்ள படத்தில் காட்டியுள்ளேன். தமிழ்ச் சொற்களுக்கிடையில் மூன்று வகையான எழுத்து வடிவங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அவற்றை அடையாளம் காண முடிகிறதா?

எண்களின் வடிவங்கள்

சில விளக்கங்கள்

எண்களின் அளவிலும் உயரத்திலும் இருக்கும் வேறுபாடுகளைப் பற்றி மேலே குறிப்பிட்டிருந்தேன். இது குறித்து காட்சிகளுடன் மேலும் சில விளக்கங்கள்,

கீழுள்ள படத்தில், முதல் வரியில் ஆங்கில மேல் அடுக்கு எழுத்துகளே உள்ளன. ஓர் எழுத்துருவில் உள்ள இயல்பான எண்களின் உயரம், இந்த எழுத்துகளின் உயரத்திற்கேற்பவே அமைந்திருக்கும் என்பதை இங்குத் தெளிவாகக் காணலாம்.

எங்களின் வேற்று வடிவங்கள்

இரண்டாம் வரி, கீழடுக்கு எழுத்துகளையே கொண்டுள்ளது. இவற்றோடு இயல்பான எண்களைச் சேர்க்கும் போது, அவை தனித்து உயர்ந்து நிற்பதைப் பார்க்கலாம். இந்த உயர வேறுபாட்டைத் தவிர்ப்பதற்காகவே ‘பழைய எண் வடிவங்கள்’ எனும் ஒரு பாங்கினை எழுத்துருவில் சேர்க்கின்றனர். இந்தப் பாங்கில் உள்ள எண்களின் உயரம், ஒரே அளவில் இருக்காது. உயர்ந்தும் தாழ்ந்தும் இருக்கும். இந்த வடிவங்கள் கீழடுக்கு எழுத்துகளோடு ஒற்றுமையாகத் தோன்றுவதை மூன்றாவது வரி காட்டுகின்றது.

தமிழில் மேலடுக்கு கீழடுக்கு என்பது கிடையாது. தமிழ் எழுத்துகளின் இயல்பான உயரம் ஆங்கில கீழடுக்கு எழுத்துகளின் உயரத்திற்கேற்ப அமைந்திருக்கும். ஆனால் இயல்பான எண்கள் எழுத்துருவில் உள்ள ஆங்கில மேலடுக்கு உயரத்தில் உள்ளவை. எனவே தமிழில் இவை இணையும்போது தனித்து நிற்கவே செய்கின்றன – நான்காவது வரி.

ஐந்தாவது வரியில் உள்ள அமைப்பே எனக்குப் பிடித்தது. ‘பழைய எண் வடிவங்கள்’ தமிழ் எழுத்துகளோடு அமைதியாக செயல்படுகின்றன. இதனை இயல்பான செயல்பாட்டிற்குக் கொண்டுவரவேண்டும்!

தமிழ் எண்கள் தமிழ் எழுத்துகளைப் போலவே இருப்பதால் ஆறாவது வரியில் இருக்கும் அமைதியை முதலில் உள்ள ஐந்து வரிகள் எதிலும் காணமுடியாது!

தமிழ் எண்கள் சில எழுத்துகளைப்போலவே தோன்றுகின்றன. தமிழில் ஒன்று, ‘க’ எழுத்தைக் கொண்டே எழுதப்படுகின்றது. ஆங்கிலத்தில் சுழியமும், மேலடுக்கு ‘O’ எழுத்தும் ஒரே தோற்றத்தில் இருப்பதைப் போல. இருப்பினும் எழுத்துருவில் தமிழ் எழுத்துகளையும் எண்களையும் சற்றே வேறுபடுத்திக் காட்டலாம், தேவையிருப்பின்.

தொடர்புடையவை:

  1. Exploring A Cursive Design for a Mixed Script Typeface.
    Muthu Nedumaran, 2018, Typoday paper presentation.
  2. எழுத்தோவியம் எழுத்துரு ஆகும் கதை
  3. தமிழ் வரிவடிவத்தில் அழகியலும் அறிவியலும்

3 comments

  1. அருமை ஐயா. தொடர்ந்து படிக்கிறேன். மகிழ்ச்சியும் நன்றியும் 🙏🏻🙏🏻🙏🏻

  2. செ. திருச்சிற்றம்பலம் (அனலை திரு ) says:

    வாழ்த்தும் பாராட்டும்.!

Leave a Reply