எழுத்தோவியம் எழுத்துரு ஆகும் கதை

இணையத்தில் சில தகவல்களைத் தேடிக்கொண்டிக்கும்போது, என் தோழி எரினின் பக்கத்தில் ஒரு பழைய நூலின் அட்டைப்படத்தைக் கண்டேன். பல ஆண்டுகளுக்குமுன் பதிப்பிக்கப்பட்ட எழுத்தாளர் சிவசங்கரி எழுதிய நூல். பதிப்பித்தது திருமகள் பதிப்பகம்.

இந்தப் பதிவு, நூலைப் பற்றியது அல்ல. அட்டையில் உள்ள தலைப்பு எழுதப்பட்டிருக்கும் எழுத்துருவைப் பற்றியது. வரைந்தவர் யாரென்று தெரியவில்லை. தலைப்பு எழுதப்பட்டிருக்கும் எழுத்தின் அழகினால் உந்தப்பட்டு ஒரு முழுமையான எழுத்துருவை உருவாக்க முனைந்தேன். தொடக்கக்கட்டக் குறிப்புகள் முகநூலில் ஐந்து சிறு கட்டுரைகளாகப் பதிவேற்றினேன். அவற்றை இங்கு தொகுத்து வழங்குகிறேன்.

எழுத்தொவியம்
நூலின் அட்டைப்பட ஓவியத்தில் உள்ள தலைப்பெழுத்து. அட்டைப்படம் சேர்க்கையில்.

தலைப்புகளுக்காகப் பயன்படுத்தப்படும் எழுத்துருக்களை ‘காட்சி எழுத்துருக்கள்’ (display typefaces) என்று கூறுவோம். பனுவல் எழுத்துருக்களுக்கும் காட்சி எழுத்துருக்களுக்கும் பல வேறுபாடுகள் உள்ளன. தலைப்புகளில் குறைந்த சொற்களே இருப்பதால் அவற்றில் அதிகமான அலங்காரங்களைச் சேர்க்கலாம். நீண்ட பனுவல்களுக்கான எழுத்துருக்களில் இவற்றைச் சேர்த்தால், தொடர்ந்து படிப்பதற்கு இடையூறாக இருக்கும்.

நூலின் தலைப்பில் ஒருசில எழுத்துகளே உள்ளன. குறிப்பாக அ, ர, வ, ந, த, ச, ல, க, ற, கால், கொம்பு. இது எழுத்துரு அல்ல. கையால் வரையப்பட்ட எழுத்தோவியம். எழுத்து வடிவங்கள் அழகாக உள்ளன. காட்சி எழுத்துருவுக்கு ஏற்ற சில கூறுகளை இந்த எழுத்துகளில் காணமுடிகிறது. குறிப்பாக மெய்யெழுத்துகளுக்கு அதிக மேலும், அடிக்கோட்டுக்கு அதிகக் கீழும் இழுப்புகள் (strokes) செல்லாதிருப்பதைப் பார்க்கலாம். இகரக் கொக்கியின் உயரத்தையும், த, ந, ர, எழுத்துகளின் வாலின் இறக்கத்தையும் பாருங்கள். அதிக மேலாகவும் இல்லை அதிகக் கீழாகவும் இல்லை. இவை இவ்வாறு இருந்தால்தான் அடிப்படை எழுத்துகளின் அளவு (base letters) பெரிதாகத் தெரியும். கொக்கி உயரமாகவும் வால் இறக்கமாகவும் இருந்தால் எழுத்தின் அளவு சிறிதாகிவிடும். காட்சி எழுத்துகளுக்கு இவை பொருந்தாது.

கிடைத்த இந்தச் சில எழுத்துகளின் வடிவங்களைக் கொண்டு ஒரு முழுமையான எழுத்துருவை உருவாக்கும் முயற்சி இது. சில முக்கியக் கூறுகளை மட்டும் பார்ப்போம்.

எழுத்தொவியம் தரும் ஓரிரு எழுத்துகளும் அவற்றிலிருந்து பிறந்த சில எழுத்துகளும்
வரையப்பட்ட ஒருசில எழுத்துகள். பெரிதாகப் பார்க்க படத்தைக் கிளிக் செய்யலாம்.

நயம் (texture)

ஓரிரு எழுத்துகளின் வடிவங்களை மட்டும் கொண்டு ஒரு முழுமையான எழுத்துருவை உருவாக்கலாம். ஆனால் அந்த ஓரிரு எழுத்துகள் அதிகப் பயன்பாடுள்ள எழுத்துகளின் வடிவங்களுக்கு அடிப்படையாக அமைய வேண்டும். ஆங்கில எழுத்துருகளை n, d, e, a, s ஆகிய எழுத்துகளைக் கொண்டே உருவாக்கத் தொடங்குவோம். இந்த ஐந்து எழுத்துகள் அதிகப் பயன்பாடு உடையவை. இன்னும் சொல்லப்போனால் எழுத்துருவின் நயத்தை (texture) இந்தச் சில எழுத்துகளே அமைக்கின்றன எனலாம். இவற்றின் வடிவங்கள் மற்ற எழுத்துகளின் தோற்றத்திற்கும் அளவுக்கும் அடிப்படையாக அமைகின்றன.

அட்டைப்படத்தில் நமக்குக் கிடைத்த எழுத்துகள் சிலவே என்றாலும், இவை அடிக்கடித் தோன்றும் எழுத்துகள். மற்ற எழுத்துகளின் வடிவங்களுக்கும் அளவிற்கும் அடிப்படையாக விளங்கும் எழுத்துகள். ன அல்லது ண-வும் இருந்திருந்தால் இன்னும் எளிதாக இருந்திருக்கும். இருந்தாலும் சிக்கல் இல்லை. ல-வைக் கொண்டு ன, ண-விற்கான வடிவமைப்பைத் தொடங்கலாம்.

ப – பார்ப்பதற்கு எளிதாகவே உள்ளது. ஆனால் இங்கே பல சிக்கல்களைக் கொடுத்தது. இதற்காகவே மற்ற எழுத்து வடிவங்களிலும் மாற்றங்களைச் செய்யவேண்டியாயிற்று. அதற்குக் காரணம், எழுத்துகளில் உள்ள தடிம மாற்றங்கள். ப எழுத்தின் இரண்டு பக்கக் கோடுகளும் படுக்கைக் கோட்டைவிட அதிகத் தடிமத்தைக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் இந்தப் புதிய எழுத்துருவில், எல்லா அடித்தளப் படுக்கைக் கோடுகளும் தடிப்பாக இருக்கவேண்டும். இது வடிவக் கோட்பாடு (design decision). ச, க, த, ல எழுத்துகளின் படுக்கைக் கோடுகளின் தடிமத்தைப் பாருங்கள். எல்லாமே தடிப்பாக இருக்கின்றன. இவற்றின் பக்கத்தில் ப வந்தால், அதற்கு மட்டும் படுக்கைக்கோடு மெலிந்து இருந்தால் அழகிருக்காது. அமைதி குலைந்து காணப்படும்.

ப எழுத்தின் சிக்கலைத் தீர்த்தால்தான் ட ம வ ய ங எழுத்துகளையும் வடிவமைக்க முடியும். அட்டைப்படத்தில் உள்ள வ வடிவத்தைப் பயன்படுத்த எனக்கு விருப்பம் இல்லை. வ-வின் தொடக்கச் சுழி அடிக்கோட்டில் இருந்து தொடங்குவதையே பெரும்பாலும் விரும்புவேன். மேலும் அட்டைப்பட வ-வின் படுக்கைக்கோடு மற்ற எழுத்துகளைப் போல் தடிப்பாக இல்லாமல் மெலிந்து இருக்கிறது. இந்தச் சூழலில் ப வின் படுக்கைகோடு தடித்திருந்தாலும் சிக்கல், மெலிந்திருந்தாலும் சிக்கல். இதை எப்படித் தீர்ப்பது? தீர்வினை படத்தில் பாருங்கள்:

மற்ற எழுத்துகளிலும் தடிம மாற்றங்களைச் செய்தேன். ர ந கால் வடிவங்களின் வலது பக்க நேர்க்கோடும் தடித்திருக்க வேண்டும். அட்டைப்பட எழுத்தோவியத்தில் இந்தக் கோட்டின் தடிமம் அவ்வாறு இல்லை. இந்த வடிவக் கோட்பாட்டை மீறினால் மற்ற எழுத்துகளின் வடிவங்கள் பாதிப்படையும். எடுத்துக்காட்டாக எ ன ண ள எழுத்துகளின் நேர்க்கோடும் அவ்வாறே தடித்திருக்கவேண்டும்.

எழுத்தமைதி

ஒரு புதிய எழுத்துருவை உருவாக்கும்போது, முதலில் தனித்து நிற்கும் எழுத்துகளின் வடிவங்களையே வரைந்து முடிப்பேன். இவை உயிர் எழுத்துகள், அகரமேறிய உயிர்மெய் எழுத்துகள், கால், கொம்புகள் ஆகியவை. இவற்றை வரைந்தெடுத்ததும், இந்த எழுத்துகள் மட்டுமே அடங்கிய சொற்களைக் கொண்டு ஒரு பனுவலை அமைத்துப் பார்ப்பேன்.

புள்ளி, எழுத்தின் மேல் தோன்றுவதாலும், எழுத்தின் வடிவத்தில் எந்தவித மாற்றத்தையும் செய்யாதிருப்பதாலும், இதில் புள்ளியையும் சேர்த்துக்கொள்ளலாம். புள்ளியைச் சேர்த்தால் இன்னும் அதிகமான சொற்கள் கிடைக்கும். இகர, ஈகார, உகர, ஊகார வடிவங்களை பிறகு சேர்க்கலாம். இவை அடிப்படை எழுத்தின் (base letter) வடிவத்தை மாற்றும் குறியீடுகள் என்பதால் முதல் கட்டத்தில் இவற்றைத் தவிர்த்துவிடுவேன்.

அவ்வாறு அமைக்கப்பட்டப் பனுவலின் ஒருபகுதியைப் படத்தில் சேர்த்துள்ளேன். இதனைப் பார்க்கும்போது, எல்லா எழுத்துகளும் ஒன்றோடொன்று அமைதியாக அமர்ந்துள்ளனவா என்பதைக் கண்டறியலாம். எந்த எழுத்தும் ‘என்னைப்பார், என்னைப்பார்’ என்று போட்டிபோட்டுக்கொண்டு கவனத்தை ஈர்ப்பதுபோலக் காட்டிக்கொள்ளக் கூடாது. அவ்வாறு தோன்றும் எழுத்துகளைத் திருத்தவேண்டும்.

எழுதமைதியை உறுதிசெய்ய தனி எழுத்துகளைக் கொண்ட பனுவல்.

அளவில் ஏற்படும் ஒவ்வாத வேறுபாடுகளும், தடிமத்தில் ஏற்படும் சீரின்மையும் அந்தந்த எழுத்தைத் தனித்து நிற்கச் செய்யும். ஒரு பனுவலில் எந்த எழுத்துமே தனித்து நிற்கக்கூடாது. இது காட்சி எழுத்துரு என்றாகும், எழுத்தமைதி (harmony) இருப்பதை இந்த நடவடிக்கை உறுதிசெய்யும். எல்லா எழுத்துகளும் தம்தம் தனித்துவத்தைக்காட்டாது அமைதியாகச் செயல்பட்டால்தான் இந்த எழுத்துருவில் அமைக்கப்பட்ட தலைப்புகளோ, மற்ற வரிகளோ எந்தவித மயக்கமும் இன்றி மிகத்தெளிவாகக் காட்சியளிக்கும். இது எல்லா வகை எழுத்துருக்களுக்கும் முக்கியமான ஒரு கூறு.

பழைய வடிவங்கள்

நான் புதிதாக உருவாக்கும் எல்லா எழுத்துருக்களிலும், பழைய வடிவங்களையும் சேர்த்துவிடுவேன். இவற்றைச் சேர்க்க நான்கு வடிவங்களே தேவைப்படும். ணா, றா, ணா வுக்கான மூன்று வடிவங்களோடு ஐகாரத்திற்குப் பயன்படுத்தப்படும் தும்பிக்கை. இந்த எழுத்துகளை மேலுள்ள படத்தின் கடைசி வரிகளில் காணலாம்.

பழைய வடிவங்களையும் புதிய வடிவங்களையும் ஒரே எழுத்துருவில் சேர்க்கலாம் என்பதை பலமுறை கூறி இருக்கிறேன். ‘இந்த எழுத்துகள் இவ்வாறு எழுதப்பட்டன’ என்று எழுத இரண்டு வடிவங்களும் தேவைப்படும் அல்லவா? மேலும் தலைப்பு எழுத்துகளில்கூட சில இடங்களில் பழைய வடிவங்கள் பொருத்தமாக அமையும். ‘பழம்பாடல் கலைநிகழ்ச்சி’ எனும் நிகழ்ச்சியின் தலைப்பில் வரும் லை பழையவடிவிலேயே இருந்தால் அது அந்தச் சூழலுக்கு அழகு சேர்க்கும் அல்லவா?

ஆங்கிலத்தில் a, g போன்ற எழுத்துகளுக்கு இரண்டு வடிவங்கள் உள்ளன – இரண்டுமே பயன்பாட்டில் உள்ளன. இரண்டையும் ஒரே எழுத்துருவில் சேர்க்கலாம், சேர்க்கிறார்கள். அதுபோலவே தமிழிலும் இந்த இரண்டு வடிவங்களையும் சேர்க்கலாம், சேர்த்தும் வருகிறேன்.

இகர, ஈகாரக் கொக்கிகள்

அட்டைப்பட ஓவியத்தில் வி, கி ஆகிய இரண்டு இகர வரிசை எழுத்துகள் மட்டுமே இருக்கின்றன. இரண்டிலுமே உள்ளக் கொக்கி, எழுத்தைத்தொட்டுத் தொடங்கவில்லை. தனியே ஒரு குறியீடாக எழுத்தின்மேல் மிதந்து கொண்டிருக்கிறது. ஈகாரக் கொக்கி கொண்ட எழுத்து இங்கே இல்லை. இருந்திருந்தாலும் அதுவும் மிதந்து கொண்டுதான் இருந்திருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

இகர ஈகார வரிசை எழுத்துகளைக் கொண்ட சொற்கள். இணைப்பில் படத்தில் காணப்பட்ட இரண்டு இகர வரிசை எழுத்துகள்.

மிதந்து கொண்டிருக்கும் இகரக் கொக்கி க எழுத்துக்கு பொருந்துவதைப் போல் வ எழுத்துக்குப் பொருந்தவில்லை என்றே தோன்றுகிறது. இருந்தாலும், ஓவியப் பின்னணியில் ஒரே ஒரு வ-குடும்ப எழுத்தில் (மற்றவை ப ய ங) மிதந்திருப்பது மிகப் பெரிய பொருந்தாத் தன்மையைக் காட்டவில்லை. மேலும் வ-வின் தொடக்கச்சுழி, மிதக்கும் வெளியை (space) சற்று மறைத்து உதவுகிறது.

ஆனால் ஓவியப் பின்னணி இல்லாத சூழலில், எழுத்துகள் மட்டுமே உள்ள ஒரு தலைப்பில், பி யி எழுத்துகளும் இருந்தால், அவற்றில் மிதக்கும் வெளி அதிகமாக இருக்கும் அல்லவா? காரணம் வ-வில் உள்ள தொடக்கச் சுழி, ப ய எழுத்துகளில் இல்லை. இகரக் கொக்கி எழுத்தின் பாதியில் இருந்து தொடங்குவதுபோல் இருக்கும். இது பி, யி எழுத்துகளைத் தனித்து நிற்கச்செய்யும். அமைதியைக் குலைக்கும். பி, யி-க்கு மட்டும் இகரக் கொக்கியை மாற்றியமைக்கலாகாது. ஏனெனில் இந்தக் குறியீடு எல்லா எழுத்துகளுக்கும் ஒரே வடிவத்தில் இருக்கவேண்டும்.

இதுபோன்ற குழப்பங்கள் எழும்போதெல்லாம், இயல்பான வடிவங்களுக்குத் திரும்புவதே சிறப்பு. எனவே, மிதக்கும் குறியீட்டுக்கு பதில், அடிப்படை எழுத்தோடு ஒட்டியே இருக்கும்படி இகரக் கொக்கியை வடிவமைத்துவிட்டேன். வெவ்வேறு எழுத்துகளுக்கு வெவ்வேறு அளவில் இந்தக் கொக்கி இருக்கும். இருந்தாலும் வடிவம் ஒன்றாகத்தான் இருக்கும். மேலுள்ள படத்தில், மூன்று வெவ்வேறு அளவில் இகரக் கொக்கிகள் உள்ளன. ப, வ, ய, ங எழுத்துகளுக்கு ஒன்றும், காலின் வலதுபுறத் தோற்றத்தைக் கொண்ட ள, ன, ண, ர, எழுத்துகளுக்கு ஒன்றும், மற்ற எல்லா எழுத்துகளுக்கும் வேரொன்றும் உள்ளது. படத்தில் இந்த மூன்றும் இருக்கின்றன. கண்டுபிடிக்க முடியாதிருந்தால் எழுத்துரு வெற்றிபெற்றுள்ளது எனலாம்.

ஈகாரக் கொக்கிக்கும் இதே அடிப்படைதான்!

உகர, ஊகார வரிசை எழுத்துகள்

உகரக் குறியீடு மூன்று வகையாக மூல எழுத்தின் வடிவத்தை மாற்றும். ஆனால் எல்லா சேர்க்கையும் கீழ் இழுப்புகளைக் கொண்டிருக்கும். எ.கா: மு, து, நு, பு. அதேபோல ஊகாரக் குறியீடும்: மூ, தூ, நூ, பூ.

இந்த எழுத்துருவில் த, ந, ற, ர ஆகிய எழுத்துகளின் வால் சற்று நீண்டிருந்தால் அழகாக இருக்கும் என்பதால் நீளமாகவே வைத்துவிட்டேன். ஆனால் இந்த நீட்சி பக்கத்தில் உள்ள எழுத்துகளின் கீழ் இழுப்புகளோடு உரசுவதற்கு நிறைய வாய்ப்புகள் உண்டு – உரசவும் செய்தன. எ. கா. ‘புத்தகம்’ எனும் சொல்லில், பு வுக்கு அடுத்து வரும் த-வின் வால், பு-வின் கீழ் இழுப்போடு உரசியது (படம்). ஆனால் த்-க்கு அடுத்துவரும் த, த்-ஓடு உரசவில்லை. இதனை கீழுள்ள படத்தின் மேல்வரியில் காணலாம்.

சூழமைவுகேற்ற மாற்று எழுத்துகள் நெருக்கத்தையும் உரசல்களையும் தவிர்க்க உதவுகின்றன.

இந்த உரசல்களைத் தவிர்க்கவேண்டும். கையெழுத்து எழுத்துருக்களில் உரசல்கள் கொஞ்சம் அழகு சேர்க்கலாம். ஆனால் இந்தக் காட்சி எழுத்துருவின் வடிவமைப்பில் உரசல்கள் அழகாக இல்லை!

உரசல்களைத் தீர்க்க வாலின் நீளத்தைக் குறைத்துவிட்டால் போதும். எல்லாம் சரியாகிவிடும். ஆனால் நீண்ட வாலின் அழகை அல்லவா விட்டுக்கொடுக்க வேண்டும்?

வால் நீளமாகவே இருக்கட்டும். முன் உள்ள எழுத்தோடு உரசும்போது மட்டும் நீளத்தைச் சற்றுக் குறைத்துவிட்டால் போதும். இடதிற்கு ஏற்றவாறு எப்படி வாலின் நீளத்தை மாற்றுவது? இதற்கு ஓப்பன் தைப் (OpenType) என்னும் எழுத்துரு நுட்பம் உதவும். இதனை சூழமைவு மாற்றங்கள் என்று தமிழில் சொல்லி வருகிறேன் (கலைச்சொல்: contextual substitutions). கொடுக்கப்பட்ட சூழலுக்கு ஏற்ப வடிவங்கள் தானாகவே மாறிவிடும். இதற்கான விதிகளை எழுத்துருவிலேயே சேர்த்துவிடலாம். அதன்பின் பயனர்கள் (users) ஒன்றும் செய்ய வேண்டியதில்லை!

எனவே, ‘புத்தகம்’ சொல்லில் வரும் முதல் த-வை (அதாவது த்-ஐ) சுருக்கமான வால் கொண்ட வடிவமாக மாற்றினால் போதும். இதேபோல எந்தெந்த எழுத்துகளோடு வால் உள்ள எழுத்துகள் உரசுகின்றனவோ, அந்தந்த இடத்தில் எல்லாம் சுருக்கமான வால் கொண்ட எழுத்துகளாக மாற்றிவிடும் விதியை எழுத்துருவிலேயே சேர்த்துவிடலாம். அதன்பின் எழுத்துரு நுட்பமே அவற்றை நமக்காக மாற்றி வைத்துவிடும்.

குறைவான இடத்திலேயே உரசல்கள் வருகின்றன. இதற்காக அழகான நீண்ட வாலை விட்டுக்கொடுக்க வேண்டியதில்லையே! இருந்தாலும், சுருக்கமான வாலுள்ள எழுத்துகளுக்கும் இயல்பான வாலுள்ள எழுத்துகளுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை அதிகம் காட்டாத அளவுக்கு இந்த நீளங்கள் இருக்கவேண்டும். படத்தில் உள்ள சொற்களில் இந்த வேறுபாடு தெரிகிறதா என்று பாருங்கள்.

ஓர் ஓவியத்தில் இருந்த ஓரிரு எழுத்துகளின் அழகினால் உந்தப்பட்டு ஒரு முழுமையான எழுத்துருவை உருவாக்க முனைந்தேன். தொடக்கக்கட்டக் குறிப்புகள் சிலவற்றை இந்தப் பதிவில் பகிர்ந்து மகிழ்ந்தேன். பயனுள்ளதாக இருந்திருந்தால் மகிழ்ச்சி. இதனை முழுமையாக்க இன்னும் நிறைய வேலைகள் உள்ளன. சில வாரங்கள் ஆகலாம். சில வேளைகளில் மாதங்களும் ஆகலாம். உங்களுக்கு ஆர்வம் இருந்தால் அடுத்தடுத்த முயற்சிகளை இதுபோலவே பகிர்கிறேன். கருத்தில் சொல்லுங்கள்.

12 comments

  1. அவசியம் பதிவிடுங்கள் சார்! தொழில்நுட்பத்தோடு போட்டிபோடுமளவுக்குக் கலைச்சொல்லாக்கத்தையும் ரசிக்கும்படி ஆர்வத்தோடு புழங்க விரும்பும்படி செம்மையாகச் செய்கிறீர்கள். அது ஒன்றுக்கேகூட இப்பதிவுகளை நான் படிப்பேன் ☺️

  2. தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு இந்த தகவலை பகிர வேண்டும்

    1. தாராளமாகப் பகிருங்கள் ஐயா. மிக்க நன்றி.

  3. மிகவும் அருமையான பயனுள்ள பகிர்வு முத்து. வாழ்த்துகள் ☺️இன்னும் நிறைய எழுதுங்கள் ☺️

  4. வணக்கம் ஐயா. கணினி தொழில்நுட்பத்தால் எழுத்துருவாக்கம் எட்டிய வளர்ச்சியில் நாம் கவனிக்க வேண்டிய மிகவும் பயன்மிகுந்த தகவல்களைப் பகுத்தாராய்ந்து தமிழில் பதிவு செய்தமைக்கு அகம் நிறைந்த நன்றிகள், ஐயா. இவற்றை தமிழ் மொழியில் வாசித்துத் தெளிவு பெறுவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன், ஐயா. நன்றி 😃

  5. அருமையான பகிர்வு…இனிய நல்வாழ்த்துகள் ஐயா…இந்திய எழுத்துருவில் தமிழ் எழுத்துக்கள் தனித்துவமானவை…அழகானவை…

    1. மிக்க நன்றி ஐயா. எல்லா வரிவடிவங்களுக்கும் தனித்துவம் உண்டு. அழகாக வடிவமைத்து அவற்றை வெளிக்கொணர வேண்டும். அதுவே எழுத்துருவியல் கலை 😃

  6. Great. I want to create font for the last 30 years. but never have time. you create and wrote article about it. Great!!!

Leave a Reply