அன்றாடத் தொழில்நுட்பத்தில் தமிழ் நுழைந்த கதை – 2

சிங்கப்பூரில் வெளிவரும் சிராங்கூன் டைம்ஸ் மாத இதழின் சூலை 2022ஆம் பதிப்பில் வெளிவந்தக் கட்டுரை. இதற்கு முந்தைய மாதக் கட்டுரையின் தொடர்ச்சி.


இணையத்தில் தமிழ் நுழைந்தாகவேண்டும்! இதுவே என் ஏக்கம். நான் ஒருவன் மட்டும் நுழைந்தால் போதாது. தமிழ் அறிந்த எல்லோரும் நுழைய வேண்டும். ஓரளவே தமிழ் அறிந்திருந்தாலும் தமிழில் அவர்கள் எழுத வேண்டும். இல்லையேல், இந்த முயற்சி வெற்றி பெறாது. ஊர் கூடி இழுத்தால் மட்டுமே இந்தத் தேர் நகரும் என்பது எனக்கு மிகவும் தெளிவாகத் தெரிந்தது!

ஊரை எப்படிக் கூட்டுவது? இதுவரை நான் உருவாக்கியத் தமிழ் உள்ளீட்டு முறையை, தமிழ் எழுத்தாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் எனத் தமிழை நன்கு கற்றவர்களே பயன்படுத்த முன்வருவர். அவர்களைக் காட்டிலும் இணையத்தை அதிகம் பயன்படுத்துபவர்கள் அலுவலகத்தில் இருப்பவர்களே. ஆனால் இணையப் பயன்பாட்டின் தொடக்க காலத்தில் இவர்களுக்குத் தமிழில் எழுதவேண்டிய அவசியம் இல்லை. மேலும் தமிழைப் பற்றி ஆங்கிலத்தில் பக்கம் பக்கமாக எழுதுவதில் இவர்களுக்குச் சிக்கலும் இல்லை.

அப்போது தமிழ் வரிவடிவத்தில் சில வரிகள் மட்டும் வேண்டும் என்றால் முதலில் ஆங்கில எழுத்துக்களில் தட்டெழுதி அதனை ஒரு கோப்பில் பதிவுசெய்து, வேறொரு செயலிவழி தமிழ்ப்படுத்த வேண்டும். தமிழ் வரிகள் படங்களாகவே வரும். எழுத்துகள் (text) கொண்ட வரிகளாக வராது. ஒரு செய்தியின் இடையிடையே இது போன்ற ‘படங்களின்’ வழிதான் தமிழ் எழுத்துகளைச் சேர்க்க முடிந்தது.

முழுமையாகத் தமிழிலேயே எழுதவேண்டுமானால் புதிதாக ஒரு விசைப்பலகை அமைப்பை (விசைமுகத்தை) பயனர்கள் பழகவேண்டும். அதற்கு யாருக்கும் நேரம் இல்லை. மலேசியா, சிங்கப்பூரில் தமிழ் நமக்குத் தாய்மொழியாக இருந்தாலும் முதன்மை மொழி அல்ல. ஒருசிலருக்கு ஆர்வம் இருக்கலாம், நேரத்தையும் ஒதுக்கலாம். ஆனால் நமக்கு ஊரே திரண்டுவர வேண்டுமல்லவா?

இதைப்பற்றிய சிந்தனை மனதில் ஓடிக்கொண்டே இருந்தது. கோலாலம்பூரில் செய்ததுபோல் அலுவலக நேரத்தில் தமிழ் தொடர்பான ஆய்வுகளைச் செய்ய எனக்கு சிங்கப்பூரில் வாய்ப்பு அமையவில்லை. நான் வேலை செய்த சன் மைக்ரோசிஸ்டம்ஸ் நிறுவனத்தின் ஆசியான் தலைமைச் செயலகத்தில் ‘விண்டோஸ்’ கணினிகள் கிடையாது. மைக்ரோசாஃப்டுடன் போட்டிபோடும் நிறுவனம் என்பதால் அந்த அலுவலகக் கணினிகள் அனைத்துமே பெரிய ‘சன்’ கணினிகள் தான். வேலைமுடிந்து வீட்டுக்குச் சென்றபின், என் அறையில் இருக்கும் ஒரு விண்டோஸ் கணினியில்தான் தமிழுக்கான ஆய்வு வேலைகளைச் செய்துவந்தேன்.

டிசம்பர் 1993-இல் ஒருநாள் அலுவலகத்தில் இருந்தபோது ஒரு சிந்தனை தோன்றியது. “நீங்கள் வழக்கமாக ஆங்கில எழுத்துகளைக் கொண்டு தமிழ் எழுதுவது போலவே விசைப்பலகையைத் தட்டுங்கள். உங்கள் ஆங்கில எழுத்துகளை உள்வாங்கி தமிழ் எழுத்துகளாகத் திரையில் நான் தருகிறேன்” என்று என்னால் கூறமுடிந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்த்தேன். இதனைக் கற்றுக்கொள்வது மிகவும் எளிதாக இருக்கும் அல்லது கற்றுக்கொள்ள எந்த ஆற்றலையும் செலவிட வேண்டியதில்லை (zero learning curve). இணையத்தில் தமிழ்ப் பயன்பாட்டை மிகவிரைவாக அதிகரித்துவிடலாம் என்று தெரிந்தது.

அந்த சிந்தனை தோன்றிய பிறகு அன்று முழுவதும் என்னால் வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை. ஐந்து மணி ஆனதும் வழக்கத்துக்கு மாறாக அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு வீட்டுக்கு விரைந்தேன். கணினியைத் திறந்து ஏற்கனவே நான் உருவாக்கிய தமிழ் உள்ளீட்டு முறைக்கான கட்டமைப்பைப் பயன்படுத்தி ‘ammaa’ என்று எழுதினால் ‘அம்மா’ என்று தமிழில் வரும் ‘அஞ்சல்’ விசைமுகத்தை உருவாக்கினேன். அன்று இரவு முழுவதும் உறக்கமில்லை. குளித்தேனா, உண்டேனா என்றுகூட நினைவில்லை.

அஞ்சல் விசைமுகம் எனக்கே மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. நான் ஆங்கிலத்திலேயே அதிகம் எழுதுவதற்கானத் தேவை இருந்தது. தமிழில் தேவையும் அவ்வப்போதுதான் என்பதோடு மெதுவாகத்தான் தட்டெழுத முடியும். இவ்வளவுக்கும் தட்டெழுதும் மென்பொருள் நான் உருவாக்கியதுதான் – அது வேறு கதை! ஆனால் அஞ்சல் விசைமுகத்தை உருவாக்கியபிறகு தமிழில் இன்னும் வேகமாக எழுதத் தொடங்கினேன்.

‘யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்று அஞ்சல் விசைமுகத்தை எல்லோருக்கும் கொடுக்கவேண்டும் என்ற ஆசை இருந்தது ஆயினும் ஏற்றுக்கொள்வார்களா என்ற அச்சமும் கூடவே எழுந்தது. “தமிழை ஏன் ஆங்கிலத்துக்கு அடிமையாக்குகிறீர்கள்?” என்று கொந்தளிப்பார்களோ என்ற பயம். பல நாட்கள் தயங்கினேன் என்றாலும் செயலியைத் தொடர்ந்து செம்மைப்படுத்திக்கொண்டே வந்தேன். பிறகு ஒருசிலரிடமாவது காட்டிக் கருத்துக் கேட்கலாம் என்ற துணிச்சல் வந்தது.

இரண்டு தமிழ்ப்பற்று கொண்ட நண்பர்களிடம் தயங்கித் தயங்கித் தட்டெழுதிக் காண்பித்தேன். அவ்வளவுதான்! “ஒருநொடிகூட தாமதிக்காதீர்கள் – உடனே வெளியிடுங்கள்” என்று பிடிவாதமாக, அவர்கள் அதட்டி ஆணையிட்டுக் கூறினர்கள். எனக்கு நம்பிக்கை வந்தது. மேலும் சில நண்பர்களிடம் பகிர்ந்தேன். ‘தமிழ்.நெட்’ எனும் மின்னஞ்சல் குழுமம் அப்போதுதான் உருவாகி வந்தது. அங்குள்ள நண்பர்களுக்கும் அனுப்பினேன். அதில் உள்ள பெரும்பாலோர் தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலை செய்பவர்கள். அவர்கள் வியந்து மகிழ்ந்ததோடு உடனே பயன்படுத்தவும் தொடங்கினார்கள்.

இணையத்தில் தமிழ் நுழைந்தாகவேண்டும் என்ற என் ஏக்கத்தினால் உந்தப்பட்ட உழைப்பில் உருவானதுதான் ‘அஞ்சல்’ விசைமுகமும் அதனைக் கொண்ட மென்பொருளும். அவ்வப்போது சிலர் என்னிடம் “நீங்களும் கூகுளைப் போன்றே தமிழ் கீபோர்டு செய்துள்ளீர்களா?” என்று கேட்பார்கள். (நான் மேலே சொல்லியதெல்லாம் நடந்தது ‘கூகுள்’ எனும் நிறுவனம் தோன்றுவதற்கு ஏறக்குறைய 5 ஆண்டுகளுக்கு முன்!)

இணையத்தில் தமிழின் பயன்பாட்டை விரைவாக அதிகரிக்க, ‘அஞ்ச’லை, இலவசமாக எவரும் தரவிறக்கம் செய்துகொள்ளும் வகையில் என்னுடைய முரசு இணையப் பக்கத்தில் 1996-இல் வெளியிட்டேன். உலகெங்கிலுமிருந்து லட்சக்கணக்கான தமிழர்கள் அதைத் தரவிறக்கிப் பயன்படுத்தத் தொடங்கினர். முதன்முறையாகத் தமிழில் ஒரு மின்னஞ்சலை எழுதி, அதைத் தமிழில் வாசித்து, தமிழிலேயே பதிலும் அனுப்ப முடிந்தது.

அப்போதிருந்த மின்னஞ்சல் குழுக்கள் ‘அஞ்ச’லை முழுவீச்சில் பயன்படுத்தின. குழு உரையாடல்களுக்கு அப்போதிருந்தது மின்னஞ்சல் குழுமங்களே. மடலாடற் குழுமங்கள் என்று அவற்றுக்குத் தமிழில் பெயரிட்டோம். என்னை நேரில் அறிந்திராத பலரும்கூட நன்றிப்பெருக்கில் தம் அனுபவங்களை எழுதத் தொடங்கினர். அமெரிக்காவிலிருந்து சிவம் என்பவர் எனக்கு எழுதிய மின்னஞ்சலை என்னால் மறக்கவே முடியாது: “அன்புள்ள முத்து, உங்கள் மென்பொருளுக்கு நன்றி! என் தாய்மொழியை 25 ஆண்டுகள் கழித்து மீண்டும் நான் கண்டடைய அது எனக்கு உதவிற்று” என்று ஒரு மின்னஞ்சல் தமிழில் அனுப்பியிருந்தார். நான் நெகிழ்ந்துபோனேன். அவரைப்போன்ற பலருக்கும் தம் தாய்மொழியை மீண்டும் கண்டடைய ‘அஞ்சல்’ உதவியதில் எனக்கு ஒரு நிறைவு. இதைப்போன்ற அனுபவங்களே என்னைத் தொடர்ந்து செயல்பட உந்துகின்றன. ‘அஞ்சல்’ பணத்துக்காகச் செய்யப்படவில்லை! மனத்துக்காக மட்டுமே!

அந்தக் காலகட்டத்தை ஒட்டி என் வாழ்க்கையின் அடுத்த கட்டம் தொடங்கியது. பெருநிறுவன வேலை என் சொந்த வாழ்க்கைக்கான நேரத்தை வெகுவாகக் குறைத்திருந்தது. உலகம் முழுவதும் சுற்றி வந்துகொண்டிருந்ததால், வளர்ந்து கொண்டிருந்த பிள்ளைகளுடன் செலவிட நேரம் கிட்டவில்லை. ஆகவே பிற நிறுவனங்களுக்கு வேலைசெய்வதை 2001 இறுதியில் விட்டுவிட்டுக் கிள்ளானுக்குத் திரும்பினேன், எனக்கு நானே முதலாளியாக ஆனேன்.

அதுவரை, ஒருபக்கம் முழுநேர வேலை இன்னொரு பக்கம் மனதுக்கு நெருக்கமான தமிழ் சார்ந்த தொழில்நுட்பப்பணிகள் என, இரட்டைக்குதிரை சவாரி செய்துகொண்டிருந்தேன் என்றாலும் அதை வெற்றிகரமாகவே செய்துவந்தேன். ‘ஆரக்கிள்’ நிறுவனம் அவர்களது நிகழ்ச்சிகளில் பேசுவதற்காகவே உலகெங்கிலும் என்னை அனுப்பிக் கொண்டிருந்தது. கவர்ச்சிகரமான, காசு கொட்டிய அக்குதிரை எனக்கு நானே முதலாளியாக ஆனதும் நின்றுவிட்டது. அதேவேளையில் என்னை உள்ளிருந்து இயக்கும் இன்னொரு குதிரை மேலும் அசுரவேகத்தில் ஓடத்தொடங்கியது. ஆனால் அக்குதிரைக்கு உணவிடவும் காசு வேண்டும்!

ஆகவே மனதுக்கு நெருக்கமான வேலைகளையே வருமானத்திற்காகவும் செய்யும்படியாக ஓர் உத்தியைக் கையாண்டேன்.

புதிய எழுத்துருக்களை உருவாக்குவது, தமிழைப்போலவே பிற மொழிகளையும் உள்ளிட என்னுடைய உள்ளீட்டு முறைகளை விரிவாக்குவது, இதுவரை இல்லாத புதிய தொழில்நுட்பங்களை மக்கள் விரும்பிப் பயன்படுத்தும் வகையில் அமைப்பது என மூன்று வகையாக அந்த வேலைகளைப் பிரிக்கலாம். குறிப்பாக இந்த மூன்றாவது வகையை ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸிடமும் கண்டிருக்கிறேன். அவர் தொழில்நுட்பத் திறனாளர்களிடையே அமெரிக்காவில் உரையாற்றும்போது பலமுறை கலந்துகொண்டு நேரடியாகக் கேட்டிருக்கிறேன். புதிய தொழில்நுட்பங்களுக்கான அவரது ஆர்வம் சுற்றியிருப்பவர்களிடமும் காட்டுத் தீயைப்போலப் பரவக்கூடியது.

முரசு அஞ்சல் மென்பொருளில் நான் உருவாக்கி இலவசமாக அளித்திருந்த எழுத்துருவின் பெயர் ‘இணைமதி’. பல லட்சம்பேர் பயன்படுத்தி ஆஹா ஓஹோவென்று கொண்டாடிய அந்த எழுத்துருவை முதன் முதலில் நான் ஆப்பிளுக்கு அனுப்பியபோது “இதில் 18 சிக்கல்கள் இருக்கின்றன” என்று கூறி அதனை நிராகரித்தனர். அப்போதுதான் எழுத்துரு வடிவமைப்பது என்பது வெறுமனே கோடுகளை வரைவது அல்ல என்ற தெளிவைப் பெற்றேன். பல மாதங்கள் செலவிட்டு அத்தனைச் சிக்கல்களையும் ஒவ்வொன்றாகப் புரிந்துகொண்டு, தீர்வுகளை ஆராய்ந்து சரிசெய்தபின் ஆப்பிள் ஏற்றுக்கொண்டு தன் கருவிகள் அனைத்திலும் இணைமதியைச் சேர்த்து வெளியிட்டது. என்னுடைய “அஞ்சல்”, “தமிழ்-99” விசைமுகங்களையும் ஆப்பிள் கருவிகளுக்காக அமைத்துக் கொடுத்தேன். இந்தச் செயல்பாடுகளில் நான் பல புதிய நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டேன்.

எழுத்துருவாக்கத்தில் இருவேறு பிரிவுகள் உள்ளன. முதலாவது எழுத்துக்களைச் சீராக வடிவைப்பது. அதாவது ஒவ்வொரு எழுத்துக்கான வடிவத்தையும் சீராக வரைவது. இதில் பனுவல் எழுத்துருக்களை (text fonts) வடிவமைப்பதில் சீர்மை மிகவும் முக்கியம். இரண்டாவது, வடிவமைக்கப்பட்ட எழுத்து வடிவங்களை சரியாகப் பொருத்துவது. இந்திய, இந்தோசீன மொழிகளுக்கான எழுத்துருவாக்கத்தில் இந்த இரண்டாவது பிரிவு மிகவும் அவசியமானது. எழுத்து வடிவங்களைச் சரியாகப் பொருத்துவதற்கு அந்தந்த வரிவடிவத்தின் இலக்கணம் தெரிந்திருக்க வேண்டும். இதனை font engineering என்று கூறுவர். பெரும்பாலான எழுத்துருவியலாளர்கள் இரண்டில் ஒன்றைத்தான் செய்வார்கள். வடிவமைப்பவர்கள் அழகையும் சீர்மையையும் மட்டுமே கவனிப்பர். பொருத்துவது பற்றி கவலைப்பட மாட்டார்கள். பொருத்தும் பணியைச் செய்பவர்கள் அழகில் அவ்வளவு கவனம் செலுத்த மாட்டார்கள். பல பத்தாண்டுகளை எழுத்துருவாக்கத்தில் நான் செலவிட்டிருந்ததால், என்னால் இரண்டையும் செய்ய முடிந்தது.

இணைமதியைத் தொடர்ந்து, ஆப்பிளுக்காக 13 வரிவடிவங்களில் (தமிழ், தேவநகரி, வங்காளம், குஜராத்தி, குர்முகி, ஒடியா, தெலுங்கு, கன்னடம், மலையாளம், சிங்களம், லாவோ, கம்போடியா, மியான்மார்) 53 எழுத்துருக்களை வடிவமைத்தேன். எச்.டி.சி. (HTC), மைக்ரோசாஃப்ட், அமேசான் நிறுவனங்களுக்கும் எழுத்துரு, உள்ளீட்டு முறை வடிவமைப்புகள் செய்தேன்.

ஆப்பிள் தன் கணினியில் என்னுடைய எழுத்துருக்களைப் பயன்படுத்தவேண்டும் என்பதில் நான் குறியாக இருந்தேன்; தொடர்ந்து ஈராண்டுகள் முயன்று வெற்றிபெற்றேன். 2010-இல் iOS4 வெளியானபோது ஆப்பிள் கணினியில் மட்டுமின்றி ஐஃபோனிலும் அனைத்து இந்திய, இந்தோ-சீன மொழிகளுக்கான என்னுடைய எழுத்துருக்கள் இடம்பெற்றன. உலகில் முதல்முறையாக மேற்கண்ட 13 மொழிக்காரர்களும் அவரவர் மொழிகளை திறன்கருவிகளில் இணையத்தில் புழங்கமுடிந்தது. அப்போது நான் அடைந்த மகிழ்ச்சி ஈடிணையற்றது.

என்னுடைய எழுத்துருவையும் உள்ளீட்டு மென்பொருளையும் சிங்கப்பூர்க் கல்வி அமைச்சு பல மதிப்பீட்டுத் தேர்வுகளுக்குப்பிறகு 2009-ஆம் ஆண்டு ஏற்றுக்கொண்டது. அது மட்டுமல்லாமல், தரப்படுத்தும் நோக்கில், பிற அனைத்து உள்ளீட்டு மென்பொருட்களையும் கணினிகளிலிருந்து நீக்கிவிடப் பள்ளிகளுக்கு செய்தியனுப்பியது. என் மென்பொருளில் அடுத்தடுத்த மேம்பாடுகள் வரும்போது அவற்றைத் தொடர்ந்து இற்றைப்படுத்தியும் (updates) வருகிறது. மலேசியக் கல்வி அமைச்சும் தமிழ்ப் பள்ளிகளில் என் மென்பொருளை ஏற்றுக்கொண்டது ஆனால் தொடர்ந்து இற்றைப்படுத்தவில்லை. சிங்கப்பூர்த் தேசிய நூலக வாரிய நூலட்டவணையில் தற்போது தமிழிலேயே உள்ளிட்டுத் தேடலாம். இவையெல்லாம் எனக்குப் பொருளீட்டித் தந்த, தரும் வேலைகள்.

தற்போது ‘அன்னை’ என்ற எழுத்துருவை எல்லா தெற்காசிய மொழிகளுக்கும் உருவாக்கி வருகிறேன். முதற்கட்டமாக தமிழையும் தேவநகரியையும் (இந்தி, மராட்டி, நேப்பாளம் மொழிகளுக்காக) சேர்த்தேன். இவற்றுக்கேற்ற அனைத்து இலத்தின் வடிவங்களையும் சேர்த்தேன் (ஐரோப்பிய மொழிகளுக்காக). இந்த முதற்பதிப்பும் ஆப்பிள் கணினிகளில் சேர்க்கப்பட்டுவிட்டது.

அன்னை எழுத்துருவை ஓர் ‘ஒத்திசையும்’ (harmonious) வடிவமைப்பில் உருவாக்குவது எனது முதன்மை நோக்கங்களுள் ஒன்று. ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகளின் எழுத்துருக்கள் ஒரே வரியில் அடுத்தடுத்த சொற்களாக இடம்பெறும்போது ஓர் எழுத்துரு மற்றொன்றைவிடப் பெரிதாகவோ அல்லது தெளிவாகவோ முண்டிக்கொண்டு முன்னே தெரிவதை நீங்கள் பார்த்திருக்கலாம். அப்படி இல்லாமல் அனைத்து மொழிகளின் எழுத்துகளும் ஒன்றுபோல, வாசிப்புக்கு ஏதுவான ஒத்திசைவுடன் அமைப்பதே என் இலக்கு.

அந்த இலக்கை எட்டுவதற்குத் தீவிரமான ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறேன். ஏறக்குறைய 38 ஆண்டுகள் சொந்த அறிதல்களின் வாயிலாகவே எழுத்துரு உருவாக்கத்தில் புழங்கி, கற்று, பங்களித்தபின், எழுத்துரு வடிவமைப்பிற்கென்றே ஓர் அறிவுத்துறை இருப்பதை மனதிற்கொண்டு என் முதுநிலைப் பட்டத்தை இங்கிலாந்தில் உள்ள ரெடிங் பல்கலைக்கழகத்தில் முடித்தேன். மேலும் எழுத்துரு உருவாக்கத்தில் பல்வேறு சோதனை முயற்சிகள் செய்யப்படாமலே உள்ளன. என்னைப்போன்ற வடிவமைப்பாளர்கள் தயாராக இருந்தாலும் அதற்கான தொழில்நுட்பம் இல்லாமலிருந்தது. அக்குறை தொடர்ந்து நீங்கிவருகிறது. அதனாலும் உற்சாகத்துடன் பணியாற்ற முடிகிறது.

எடுத்துக்காட்டாக, கையெழுத்தைப் போன்றே எழுத்துருக்களை உருவாக்குவதைக் குறிப்பிடலாம். தற்போது அப்படியான எழுத்துருக்கள் இருக்கின்றன என்றாலும் அவை கையெழுத்தின் சில முக்கியமான பண்புகளை, தனித்தன்மைகளைப் பிரதிபலிக்கவில்லை. எழுதுகோலால் தாளில் எழுதும்போது நாம் தொடங்கும், முடிக்கும் இடங்கள் சற்று அழுத்தமாக இருக்கும். ஆனால் கையெழுத்தைப் போன்ற கணினி எழுத்துருவில் அவற்றைக் காணமுடியாது. அக்குறைகளையும் களையவேண்டும் என்று முயன்றுவருகிறேன். என்னுடைய ஆய்வில் இதுவும் ஒரு பகுதி.

தேவநகரி, குருமுக்கி, வங்காள மொழி எழுத்துருக்களில் கையெழுத்தைப் போலவே எழுத்துரு வடிவமைப்பது மேலும் சவாலானது. இம்மொழிகளின் எழுத்துகளின் மேற்பகுதியில் ‘தலைக்கோடு’ ஒன்றிருக்கும். அடுத்தடுத்த எழுத்துகளை இணைக்கும் இத்தலைக்கோடு கையால் எழுதப்படுவதைப் போன்ற அழுத்த மாறுபாடுகளுடன் ஒவ்வொரு சொல்லும் தொடங்கும், முடியும் இடங்களில் மாறவேண்டும். ஆனால் இன்னொரு எழுத்து சேர்க்கப்பட்டால் தலைக்கோடு பழையபடி நேர்க்கோடாக ஆகவேண்டும். என் பொறியியல் பின்புலம் இச்சிக்கல்களை எதிர்கொள்ள வெகுவாக உதவியது. தற்போது ஆப்பிள் கருவிகளில் மட்டுமே இவ்வெழுத்துரு வேலைசெய்யும். மைக்ரோசாஃப்டிலும் கொண்டுவர அவர்களுடன் பணியாற்றி வருகிறேன்.

எல்லா எழுத்துருக்களும் ஒத்திசைவுடன், உறுத்தலின்றி, வாசிக்க ஏதுவாக ‘அன்னை’ எழுத்துருவில் அமைந்திருக்கும் ஓர் எடுத்துக்காட்டை இங்கே பார்க்கலாம். குறிப்பாக இரண்டாவது வரியின் மூன்றாவது சொல்லில் முதலிரண்டு எழுத்துகள் தேவநகரியிலும் அடுத்த மூன்று எழுத்துகள் தமிழிலும் இடைவெளியின்றி அழகுற ஒத்திசைந்து செல்வதைக் காணலாம்.

ஆப்பிள் கருவிகளுக்கான எழுத்துருக்களை உருவாக்க நான் சொந்தமாகவே துணை மென்பொருள் கருவிகளை (font proofing and debugging tools) உருவாக்கி வந்தேன். இவை அனைத்தையும் முறையாகத் தொகுத்து, எளிமையான பயன்பாட்டு வழிமுறைகளைச் சேர்த்து ‘ஐபிஸ்கஸ்’ (http://hibizcus.com) எனும் பெயரில் கடந்த ஆண்டு பொதுப்பயன்பாட்டிற்காக இலவசமாகவும், திறவூட்டு மென்பொருளாகவும் (free and open source) வெளியிட்டேன். இந்தத் துணை மென்பொருள் கருவிகளைக் கொண்டு தெற்காசிய, தென்கிழக்காசிய மொழிகளுக்கான எழுத்துருக்களை உருவாக்குவதை மிகவும் எளிமைப்படுத்தலாம், அவை சரியாக இயங்குகின்றனவா என்று அந்தந்த மொழியை அறியாதோரும் சரிபார்க்கலாம். எழுத்துருவாக்க உலகில் இந்த ‘ஐபிஸ்கஸ்’ செயலி தற்போது சிறப்பான வரவேற்பைப் பெற்றுவருகிறது.

இவைபோக, என் பொருளையும் நேரத்தையும் செலவிட்டு, இலவசப் பயன்பாட்டிற்காக நான் அளித்துவரும் பிற சேவைகளும் உண்டு. உலகில் ஆக அதிகமானோர் (ஏறக்குறை 20 லட்சம் பேர்) கைபேசிகளில் தமிழ் உள்ளீட்டுக்குப் பன்படுத்தும் ‘செல்லினம்’, பிற மொழிகளுக்கான ‘சங்கம்’ விசைப்பலகைகள் ஆகியவை அத்தகைய சேவைப் பணிகள். மலேசியாவில் மலாய் எழுதப்படும் அரபு வரிவடிவமான ஜாவி உள்ளீட்டிற்கும் விசைப்பலகை உருவாக்கியுள்ளேன். இவை எல்லாம் செல்லினத்தை அடிப்படையாகக் கொண்டவையே. வழக்கம் போல தமிழில் முதலில் செய்து முடித்துவிட்டு பிறமொழிகளுக்கும் நாம் பெற்ற இன்பத்தைத் தரவேண்டும் எனும் கோட்பாடுதான். தவிர, தமிழில் செய்வது எளிது. மற்ற மொழிகளைவிட நமக்கு எழுத்துகளும் குறைவே!

திறன்பேசிகளில் செல்லினத்தின் பயன்பாடு நாளுக்குநாள் கூடிக்கொண்டெ போகிறது. ஒவ்வொரு நாளும் சராசரியாக ஏறக்குறைய 500 பேர் செல்லினத்தைப் பதிவிறக்கம் செய்கிறார்கள். சில காரணங்களுக்காக சிலர் நீக்கவும் செய்கிறார்கள் – அதை விடுவோம்!

திறன்பேசிகள் வருவதற்கு முன்பே, நோக்கியா, சோனி எரிக்சன் போன்ற சாதாரணக் கைப்பேசிகளிலும் செல்லினம் இயங்கியது. இன்னும் சொல்லப்போனால், செல்லினத்தை நான் முதன் முதலில் பொதுப்பயனீட்டிற்கு வெளியிட்ட ஆண்டு 2005. சிங்கப்பூர் ஒலி 96.8 வானொலி நிலையத்துடன் இணைந்து பொங்கலன்று நடத்தப்பட்டது அந்த வெளியீட்டு நிகழ்ச்சி. கைபேசிகளில் தமிழ்க் குறுஞ்செதியைக் காண வந்தோரின் கூட்டம் பாக்கர் சாலையில் உள்ள ஏ.சி.எஸ் பள்ளி அரங்கை நிரப்பியது. வெளியிலும் கூட்டம். ‘நேற்றுவரை மூன்று தமிழ், இன்றுமுதல் நான்கு தமிழ், இதோ கைத்தொலைபேசியில் கணினித்தமிழ்’ என்று வைரமுத்து கவிதை சொல்ல, அது அரங்கிலேயே கைபேசியில் கோக்கப்பட்டு, குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டதை அனைவரும் திரையில் கண்டனர். அவர்கள் வெளிப்படுத்திய மகிழ்ச்சியை அளவிட முடியாது!

வெளியீட்டிற்குப் பின் ஆயிரக்கணக்கான ஆர்வலர்கள் செல்லினத்தைப் பதிவிறக்கம் செய்யத் தொடங்கினர். அப்போதெல்லம் திறன்பேசிகள் இல்லை. செல்பேசி நிறுவனகளிடம் ஜி.பி.ஆர்.எஸ் (GPRS) வசதி வேண்டும் என்று கேட்டுப் பெறவேண்டும். அதன்பின் சில வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். இவை எல்லாம் சாதாரணப் பயனர்களுக்குக் குழப்பத்தை ஏற்படுத்துபவை.

தமிழகத்தில் இருந்து சிங்கப்பூருக்கு வேலை செய்ய வந்திருந்த பல தொழிலாளர் நண்பர்கள் சற்றே தடுமாறினர். இவர்களுக்கெலாம் வழிகாட்ட யீசூன் பெருவிரைவு ரயில் நிலையத்தின் அருகில் ஓர் இடத்தில் சந்திக்க ஏற்பாடு செய்தேன். ‘ஒலி’யின் அன்றைய தலைவர் அழகிய பாண்டியன் இச்சந்திப்புகள் தொடர்பான அறிவிப்புகள் வானொலியில் வெளிவர உதவினார்.

மாலை 5.00 மணிக்கு சந்திப்பு. நான் 4.50க்கெல்லாம் சென்று விட்டேன். அங்கே ஒருவர் 4.30க்கே வந்து காத்துக்கொண்டிருந்தார். துறைமுகத் தொழிலாளிபோல அவருடைய தோற்றம் இருந்தது. “ஐந்துமணிக்குத்தானே” என்றேன். “இல்லை ஐயா, உங்களை நான் முதலில் பார்த்துவிடவேண்டும் என்று முன்கூட்டியே வந்துவிட்டேன்” என்று சொல்லி, தனது சம்சொங் C100 செல்பேசியைத் தந்து “இதில் எனக்கு செல்லினம் வேண்டும் ஐயா” என்று கேட்டார். அவருக்கு ஆங்கிலம் தெரியாது என்பதைப் புரிந்து கொண்டேன். அவர் பெயர் ஆசைத்தம்பி.

செல்பேசியை வாங்கி, பதிவிறக்க வேலைகளைச் செய்துகொண்டிருந்தபோது எனக்குத் தொடர்ந்து புகழாரம் சூட்டிக்கொண்டிருந்தார். “உங்களுக்கு ஏன் இதில் இவ்வளவு ஆர்வம்? இப்போதெல்லாம் இந்தியாவுக்குத்தான் மிகக்குறந்த விலையில் தொலைபேசலாமே? எஸ்.எம்.எஸ் அனுப்ப முடியாவிட்டால் என்ன? ஏன் தமிழில் குறுஞ்செய்தி?” என்று கேட்டேன். அவர், “என் மனைவிக்கு தமிழ் மட்டும்தான் படிக்க முடியும். அவரால் வாய்பேச முடியாது ஐயா” என்றார். நான் அமைதியானேன். அவர் முகத்தில் வடிந்த அன்பைப் பார்த்தேன். சில நிமிடங்கள் செயலிழந்தேன்! அதுவே செல்லினம் எனக்குத் தந்த முதல் வெற்றி!

எழுத்துரு வடிவமைப்பு, உள்ளீட்டுத் தொழில்நுட்பத் துறைகளில் இன்னும் செய்வதற்கு எவ்வளவோ இருக்கின்றன; அவ்வேலைகளுக்கான பட்டியலும் திட்டங்களும் என் எண்ணங்களில் நீண்டுகொண்டே செல்கின்றன. இது முடியாது, இது கடினம், இதற்கான ஆதரவு கிட்டாது போன்ற எரிச்சலூட்டும் சொற்றொடர்களை நான் அறவே ஏற்றுக்கொள்வதில்லை!

எந்தத் துறையிலும் அடிப்படைச் சிக்கல்கள் தீர்க்கப்பட்டவுடன் தொடர் மேம்பாடுகளைக் கொணரப் பலரும் தயாராக இருப்பர். எடுத்துக்காட்டாக, ஆப்பிள் iOS13-இல் 23 மேற்பட்ட இந்திய மொழிகளின் 40க்கும் மேற்பட்ட எழுத்துருக்கள் இடம்பெற்றுள்ளன. தமிழுக்கு மட்டும் நான்கு. அவையனைத்தும் என்னுடையதல்ல. நான் போட்ட பாதை மேலும் விரிவும் செம்மையும் அடைவதில் எனக்கு மகிழ்ச்சியே. ஆயினும் எவரும் செல்லாத ஊர்களுக்கு முதன்முதலில் ஓர் ஒத்தையடிப்பாதை அமைத்துத் தருவதில்தான் என்னுடைய தனிப்பட்ட விருப்பம் நீடிக்கிறது. அச்சிறு பாதைகளை ராஜபாட்டைகளாக ஆக்குவதற்கு எத்தனையோ ஆர்வலர்கள் உள்ளனர், அவர்களிடம் அப்பணியை விட்டுவிடலாம்.

எழுத்துரு வடிவமைப்பு, உள்ளீட்டுத் துறைகளிலுள்ள அனைத்துச் சிக்கல்களையும் நான் மட்டுமே தீர்க்கப்போவதில்லை; அவசியமுமில்லை. குறிப்பிட்ட இலக்கை நோக்கிச் செல்லும் பயணத்திற்கு இடையூறாகும் இடைஞ்சல்களை தேவையான அளவிற்கு மட்டும் களைந்துகொண்டு தொடர்ந்து முன்னேறிச் சென்றால் போதும் என்ற கோட்பாட்டுடன் என் திட்டங்களை ஒவ்வொன்றாகச் செயல்படுத்தி வருகிறேன்.

சொல்லப்போனால் தடைகளே புத்தாக்கங்களுக்கான உந்துவிசைகள் என்பேன். தடைகளைக் களைவது தனி இன்பம். அந்தவகையில், இது முடியாது, இது கடினம் என்றெல்லாம் சொன்னவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்கள் அப்படிச் சொல்லியிராவிட்டால் இவ்வளவு தீவிரமாகச் செயல்பட்டிருப்பேனா என்ற ஐயம் எனக்குண்டு. தடைக்கற்களைப் படிக்கற்களாக்கும் என் தமிழ்த் தொழில்நுட்பப் பயணத்திற்கு நம் சமூகம் அளித்துவரும் ஆதரவும் உற்சாகமும் தொடரும் என்று நம்புகிறேன்.

கடந்துவந்த பாதையில் மீண்டும் நடந்துபார்க்கவும், செல்லவேண்டிய இலக்கையும் தொலைவையும் மீண்டும் துல்லியப்படுத்திக்கொள்ளவும் இக்கட்டுரை எழுதியது உதவியது. இந்த நல்வாய்ப்பை அளித்த ‘தி சிராங்கூன் டைம்ஸ்’ இதழுக்கும், இக்கட்டுரையின் முதல் பகுதியை வாசித்துக் கருத்துகளையும் உணர்வுகளையும் பகிர்ந்துகொண்ட வாசகர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி!

(முற்றும்)

Leave a Reply