இடைவெளியும் தமிழ் உயிர் குறியீடுகளும்

தமிழ் எழுத்துரு பயன்பாடுகள் சிலவற்றை ஆய்வு செய்துகொண்டிருந்தேன். எழுத்துகளுக்கிடையே உள்ள இடைவெளியை மாற்றியமைக்கும்போது, தமிழ் வடிவமைப்பைப் பாதிக்கும் நுட்பமான ஒரு சூழலைக் கண்டேன்.

ஆங்கிலத்தில் ஒவ்வோர் எழுத்துக்கும் இடையே ஒரே அளவிலான இடைவெளியை சேர்த்துவிடலாம். ஆனால் தமிழில் அவ்வாறு சேர்ப்பதில் ஒரு சிக்கல் இருக்கிறது. உயிர்மெய் எழுத்துகளில் உயிர் குறியீடுகள் சேர்க்கப்படுகின்றன. அவை புள்ளி, ஈகாரக் கொக்கி போன்ற இடமெடுக்கா குறியீடுகளாக இருக்கலாம் (non-spacing marks), அல்லது கால் கொம்பு போன்ற இடமெடுக்கும் குறியீடுகளாக (spacing marks) இருக்கலாம். இடைவெளி மாறும்போது, இடமெடுக்கும் குறியீடுகளுக்கும் அவற்றின் அடிப்படை மெய் எழுத்துக்கும் இடையே உள்ள வெளியை எப்படிக் கையாள்வது? எடுத்துக்காட்டாக, ‘பாடம்’ எனும் சொல்லில், எழுத்துகளுக்கிடையே உள்ள இடைவெளியை அதிகரிக்கும்போது, ப-வுக்கும் காலுக்கும் உள்ள இடைவெளியை என்ன செய்வது?

இது குறித்து வடிவமைப்பாளர்களும் பொறியியலாளர்களும் ஏற்கெனவே கலந்துரையாடி இருக்கிறார்கள் — ஆனால் தெளிவான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. மொழியியல் அடிப்படையில் சரியாக இருக்கும் அணுகுமுறையே பெரும்பாலும் பின்பற்றி வருகிறார்கள் — அதாவது குறியீடுகளை அடிப்படை மெய்யுடன் இணைத்தே வைப்பதுதான் சரி. அழகியல் அடிப்படையில் இந்த சீர்மையற்ற இடைவெளியை மேலும் செம்மைப்படுத்த ஏதேனும் நுட்பங்களைச் சேர்க்கலாமா என்பதை ஆராய்வதே இந்தப் பதிவின் நோக்கம்.

ஆய்வு அமைப்பு

எழுத்துகளை சரிவர அடுக்குவதற்கு எழுத்துரு வடிவமைப்புச் செயலிகளைப் (HarfBuzz, CoreText போன்றவை) பயன்படுத்துகிறோம். தமிழ் வரிகளையும் விரும்பும் எழுத்துருவையும் இந்தச் செயலிக்குள் செலுத்தினால் எழுத்துகளை எவ்வாறு அடுக்குவது என்பதற்கான துல்லியமான விவரம் நமக்குக் கிடைக்கும். இங்கே எழுத்துகளுக்கிடையே எவ்வளவு இடைவெளியைக் கொடுக்கவேண்டும் என்ற விவரத்தையும் சேர்த்துவிடலாம். இந்த இடைவெளி அளவை விருப்பத்திற்கேற்ப மாற்றியமைப்பதற்கு ஒரு நழுவுகோலைச் (slider) சேர்த்து சிறிய செயலி ஒன்றை உருவாக்கினேன்.

இடைவெளி என்பது ஒவ்வோர் எழுத்துக்கும் இடையே சீரான இடைவெளியைச் சேர்ப்பது — தலைப்புகள், சின்னங்கள், சுவரொட்டிகள் போன்ற பெருங்காட்சி (Display) வடிவமைப்புகளில் இந்த இடைவெளி மாற்றம் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆங்கில எழுத்துகளுக்கு இது எளிமையாக இயங்குகிறது. தமிழுக்கும் அதே விதிகளைப் பயன்படுத்தும்போது மேலே குறிப்பிட்டது போல சில அழகியல் சார்ந்த சிக்கல்கள் ஏற்படுகின்றன.

எங்கே எவ்வளவு இடைவெளி?

கா என்ற எழுத்தில் உள்ள துணைக்கால் (ா), கை-யில் உள்ள ஐகாரக் குறி (ை), கே-யில் உள்ள ஏகாரக் கொம்பு (ே) — முதலியவை இடமெடுக்கும் குறியீடுகள். இந்தக் குறியீடுகளுக்கு அவற்றுக்கே உரிய நகர்வெளிகள் (advance width) உள்ளன; அடிப்படை மெய் எழுத்துக்கு பக்கத்தில் அமரும் குறியீடுகள். எழுத்துரு வடிவமைப்புச் செயலிகள் இவற்றை அடிப்படை மெய்யுடன் சேர்த்து ஓர் உயிர்மெய் கொத்தாகக் (cluster) கையாளும். சுட்டியை நகர்த்தும்போது, இந்தக் கொத்தை முழுமையாகத் தாண்டித்தான் செல்லும். க-வுக்கும் துணைக்காலுக்கும் இடையே சுட்டியை நிறுத்த இடம் கொடுக்காது.

அதுபோலவே, இடைவெளியை உயிர்மெய் எல்லைகளுக்கிடையில் மட்டும் செலுத்தும்போது, அடிப்படை மெய்க்கும் குறியீட்டுக்கும் இடையேயுள்ள இடைவெளி மாறாமல் அப்படியே இருக்கும் — உயிர்மெய்களுக்கு இடையேயுள்ள இடைவெளி மட்டுமே பெரிதாகும். இலக்கண விதிப்படி இதுதான் சரி — இந்தக் குறியீடுகள் அவற்றின் மெய்யுடன் பிணைந்தவை அல்லவா? மெய்யைவிட்டு நீங்கினால் இவை பொருளற்றவையாகிவிடும். ஆனால் உயிர்மெய் எல்லைகளுக்கிடையே உள்ள இடைவெளியை மட்டும் அதிகரிக்கும்போது, அழகியல் அடிப்படையில் ஓர் அமைதியற்ற தன்மை தோன்றுகிறது. குறியீடுகள் தம் மெய்யோடு ஒட்டிக்கொண்டிருக்க, மற்றவை எல்லாம் விலகிச் சென்று நிற்பது சீர்மையைக் காட்டவில்லை.

இடமெடுக்கா குறியீடுகளுக்கு இந்தச் சிக்கல் இல்லை. இதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு புள்ளி (்) — அடிப்படை மெய்யின் மேல் நகர்வெளி இல்லாமல் அமரும்; எப்போதும் மெய்யுடன் இணைந்தே இருக்கும். சில எழுத்துருக்களில் ஈகாரக் கொக்கியும் (ீ) இடமெடுக்கா குறியீடாகவே வடிவமைக்கப்பட்டிருக்கும். இவற்றில் எந்தச் சிக்கலும் இல்லை — இவை அடிப்படை மெய்யுடன் நங்கூரமிட்டவை; இடைவெளி இவற்றைப் பாதிக்காது. இந்தப் பதிவில் நாம் ஆராயும் சிக்கல் இடைவெளியுள்ள குறியீடுகளைப் பற்றியதே — அடிப்படை மெய்க்குப் பக்கத்தில் தனி இடத்தை நிரப்பிக் கொண்டிருக்கும் குறியீடுகள்.

மூன்று அணுகுமுறைகள்

இடைவெளி சேர்க்கையினால் ஏற்படும் விளைவுகளை ஆராய மூன்று அணுகுமுறைகளைக் கையாண்டேன்:

  • முதலாவது, இடைவெளியுள்ள குறியீடுகளை அடிப்படை மெய்யுடன் முழுமையாகப் பிணைத்தே வைப்பது (அளவு 0%) — அதாவது குறியீட்டுக்கும் மெய்க்கும் இடையே கூடுதல் இடைவெளி எதுவும் சேர்க்காமல் வைத்திருப்பது.
  • இரண்டாவது, உயிர்மெய் கொத்துகளுக்கிடையே சேர்க்கப்படும் இடைவெளியின் முழு அளவையும் குறியீடுகளுக்கும் கொடுப்பது (அளவு 100%). அதாவது ‘பாடம்’ எனும் சொல்லில், ட-ம் இரண்டுக்கும் இடையே உள்ள அதே வெளியளவை பவுக்கும் துணைக்காலுக்கும் இடையே வைப்பது.
  • மூன்றாவது, இடைப்பட்ட அணுகுமுறை — இடைவெளியில் ஒரு குறிப்பிட்ட விழுக்காட்டை மட்டும் (30% என்று வைத்துக்கொள்வோம்) குறியீடுகளுக்குக் கொடுப்பது — இது மென்மையான ஒரு பரவலைக் காட்டும் எனும் நோக்கில்.

மூன்றாவதாகக் கையாளப்பட்ட பகுதியளவு அணுகுமுறை மிகவும் களிநயமான தோற்றத்தைத் தந்தது. 25–35% அளவில், மெய்க்கும் குறியீட்டுக்கும் இடையேயுள்ள காட்சித் தொடர்பு அறுபடாமலேயே சொற்கள் சீராகத் தெரிந்தன – எளிதாக வாசிக்கவும் முடிந்தது. ஆனால் ‘சரியான அளவு’ என்பது எழுத்துருக்கு எழுத்துரு மாறுபட்டிருந்தது – இதுவே முக்கியமான படிப்பினையாகக் கருதுகிறேன். நெருக்கமான குறியீட்டு அமைப்புள்ள எழுத்துருக்களுக்கு 0% சிறப்பாகவே தெரிகிறது. தாராளமான இடைவெளியுள்ள எழுத்துருக்களுக்கு 30% அல்லது அதற்கும் மேலும் தேவைப்படுகிறது. துல்லியமான அளவு என்று ஒன்றில்லை.

பயனரே படைப்பாளி

ஒரு செய்தியை பொருத்தமாகவும் அழகாகவும் சொல்வதற்காகவே எழுத்துரு வடிவமைப்பு பயன்படுகிறது. இதற்காக வடிவமைப்புச் செயலிகள் பல பொதுவான விதிகளையும் வசதிகளையும் வழங்கினாலும், எவை பொருந்துகின்றன என்பதை பயனர்களே முடிவு செய்வர். உண்டு இல்லை என்ற இருநிலை விதிகளைவிட இடைப்பட்ட நிலையை தேர்த்தெடுக்கும் வசதி கொடுக்கப்பட்டால், அனைவரையும் கவரும் வகையில் அழகான ஒரு கலைப்படைப்பை அவர்கள் உருவாக்க முடியும். சொற்களுக்கும் அவை வழங்கப்படும் எழுத்துருவுக்கும் ஏற்ற சமநிலையை ஏற்படுத்த துல்லிய அளவுகளைச் சேர்க்க வேண்டும். இதற்கு நழுவுகோல் போன்ற கருவிகள் பெரிதும் உதவும்.

இலக்கணச் சரிநிலைக்கும் அழகியல் ஈர்ப்புக்கும் இடையே முரண்பாடுகள் தேவையில்லை — சமநிலை ஏற்படுத்த கருவிகள் நமக்கு இடம் கொடுத்தால் போதும்.

இடைவெளியைக் கையாளும் இன்றைய கருவிகள் இருநிலை விதிகளைக் கொண்டே செயல்படுகின்றன — எல்லைகளை முழுமையாக மதிப்பது, அல்லது முற்றாகப் புறக்கணிப்பது. நடுநிலை என்று ஒன்றில்லை. மேலே குறிப்பிட்டுள்ளதைப் போன்ற இடைப்பட்டத் தேர்வு பயனுள்ளதாக இருக்கும் என்றால், இது குறித்து மேலும் கலந்துரையாடல் நிகழ வேண்டும். செயலி உருவாக்குநர்களின் கவனத்தை இந்தக் கருத்துகள் ஈர்க்கும்.

இந்த ஆய்வு முழுவதும் கிடைமட்ட அமைப்பை (horizontal layout) அடிப்படையாகக் கொண்டது. செங்குத்து அமைப்பில் (vertical layout) இடமெடுக்கும் குறியீடுகளை அடிப்படை மெய்யிலிருந்து பிரிப்பது சரியாக இருக்காது. ‘கொ’ எழுத்தில் உள்ள கொம்பு, க, துணைக்கால் ஆகியவை செங்குத்தாக அடுக்கப்பட்டால் எவ்வளவு பொருத்தமற்று இருக்கும் என்று எண்ணிப் பாருங்கள். இடைவெளி என்பது கிடைமட்ட அச்சுக்கே உரிய செயல்பாடு.

இந்த ஆய்வு தமிழை மையமாகக் கொண்டது, ஆனால் இதே சிக்கல் மலையாளம், சிங்களம், தென்கிழக்கு ஆசிய வரிவடிவங்களிலும் காணப்படுகிறது — இடமெடுக்கும் குறியீடுகளைப் பயன்படுத்தும் எல்லா வரிவடிவங்களுக்கும் இது பொருந்தும். அவற்றையும் தொடர்ந்து ஆராய ஆவல்.

முகநூல் பதிவு:

https://www.facebook.com/share/v/1CDdSDSYXr

Leave a Reply