நான் பேனாவைக் கொண்டு கடிதங்களையோ கட்டுரைகளையோ எழுதுவது கிடையாது. சிற்சில குறிப்புகளை எழுதுவதோடு சரி. மற்ற எல்லா எழுத்து வேலைகளும் கணினியிலும் கையடக்கக் கருவிகளிலும் மட்டுமே நடக்கும். சிலவேளைகளில் கலந்துரையாடல்களுக்கிடையே தாளில் நான் எழுதும் தமிழ்க் குறிப்புகளைப் பார்த்து சில இளைய தலைமுறையினர் வியந்திருக்கிறார்கள். குறிப்பில் இருக்கும் லை, ளை, ணை முதலிய எழுத்துகளின் வடிவங்கள் அவர்கள் பழக்கப்பட்ட வடிவத்தில் இல்லாமல் யானையின் தும்பிக்கை வடிவத்தோடு தொடங்கி இருக்கும். எழுபதுகளிலும் அதற்குமுன்னும் தமிழ்க் கற்றவர்களுக்கு இவை பழக்கப்பட்ட வடிவங்கள். பலர் இன்னும் கையால் எழுதும்போது இந்த முந்தைய வடிவங்களையே பயன்படுத்துவர். நானும் அப்படித்தான்.

இந்த வடிவங்களுக்கு பதில், தற்கால வடிவங்களைப் பயன்படுத்தவேண்டும் என்று 1978ஆம் ஆண்டு தமிழக அரசு ஓர் அரசாணையை வெளியிட்டது. தொடர்ந்து மலேசியா, சிங்கப்பூர், இலங்கை ஆகிய நாடுகளும் இம்மாற்றங்களை ஏற்றுக்கொண்டன. கல்வி, அரசு முதலிய துறைகளில் சீர்திருத்த வடிவங்கள் அலுவல் முறையான எழுத்து வடிவமாக மாறிய போதிலும், முந்தைய வடிவங்கள் முற்றிலும் மறைந்துவிடவில்லை — பழைய வெளியீடுகள், சமய நூல்கள், பெயர்ப் பலகைகள், எழுத்தழகுக் கலைஞர்களின் வரைபடங்கள், வடிவமைப்பாளர்களின் படைப்புகள் போன்றவற்றில் அவை தொடர்ந்து இடம்பெற்று வந்தன – சில இடங்களில் இன்னும் இடம்பெற்று வருகின்றன.
ஒரே எழுத்துருவில் இரண்டு வடிவங்கள்
புதிய எழுத்து வடிவங்கள் வந்ததால், பழையன முற்றாக நீங்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆங்கிலம் மலாய் மொழிகளை எழுதப் பயன்படுத்தப்படும் இலத்தீன் வரிவடிவத்திலும் ‘ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு வடிவம் மட்டுமே’ என்று எந்தக் கோட்பாடும் இல்லை. எடுத்துக்காட்டாக, கீழடுக்கு எழுத்துகளான (lower case) ‘a’, ‘g’ ஆகியவற்றை இருவேறு முறைகளில் எழுதலாம். பாட நூல்கள், அலுவல் முறை ஆவணங்கள், கட்டுரைகள், கதைகள் போன்ற நீண்ட பனுவல்களுக்கு ஒரு வடிவமும், கையெழுத்தில் வேறொரு வடிவமும் இந்த எழுத்துகளுக்கு உண்டு.

இரு வடிவங்களும் எழுத்துருக்களில் தொடர்ந்து சேர்க்கப்பட்டு வருகின்றன. இடத்துக்கும் பொருளுக்கும் ஏற்றவாறு வடிவத்தைத் தேர்ந்தெடுக்கலாம். அதிகாரக் குரலுக்கு ஒரு வடிவம் என்றால் அரவணைப்புக் குரலுக்கு மற்றொரு வடிவம். அதேபோல ‘fi’, ‘ff’, ‘ft’, ‘tt’ போன்ற இணை எழுத்துகளுக்கு அழகாக இணைக்கப்பட்ட வடிவங்கள் எழுத்துருக்களில் சேர்க்கப்பட்டு வருகின்றன. இவை இயல்பான வடிவங்களாகவோ விருப்பத்தேர்வு வடிவங்களாகவோ அமையலாம்.
இதே பயன்பாடு நமக்கும் பொருந்தும். முந்தைய தமிழ் உயிர்மெய் வடிவங்களை பழமையைக் காட்டும் ஓர் எழுத்து நடையாகக் கூடக் கருதலாம். பொருளிலும் பயன்பாட்டிலும் அவை எந்தவிதத்திலும் குறைந்தவை அல்ல.
முந்தைய வடிவங்கள் ஏன் தேவை?
இவற்றைப் பேணிக்காக்க அடிப்படையான காரணம் ஒன்று உண்டு. முந்தைய உயிர்மெய் வடிவங்களைப் பற்றி எழுத வேண்டியத் தேவை ஏற்படும்போது — “இந்த வடிவங்கள் முன்பு இவ்வாறு எழுதப்பட்டன” என்று சொல்லி — முந்தைய வடிவங்களை அதே வரியில் காட்ட இயலவேண்டும். சில பத்தாண்டுகளுக்கு முன் வரை பயன்பாட்டில் இருந்த வடிவங்களை ஒரே வரியில் காட்ட இயலாத எழுத்து வரலாற்றுப் பேச்சு முழுமையற்றதாகிவிடும்.
எழுதுவதைத் தாண்டி, படிப்பதிலும் ஒரு முக்கியமான தேவை இருக்கிறது. வடிவமாற்றத்திற்கு முன் அச்சிடப்பட்ட ஆயிரக்கணக்கான நூல்கள், இதழ்கள், வெளியீடுகள் அனைத்தும் முந்தைய வடிவங்களைக் கொண்டே அச்சிடப்பட்டுள்ளன. மறுவெளியீடு காணாத ஆயிரக் கணக்கான பாடல்கள், கவிதைகள், புதினங்கள், ஆய்வுக் கட்டுரைகள், சமய நூல்கள் என நம் பண்பாட்டுச் செல்வத்தின் விலைமதிப்பற்ற பெரும்பகுதி இவற்றில் அடங்கும். முந்தைய வடிவங்களை அறியாத புதிய தலைமுறையினர் இவற்றை எல்லாம் படிக்க இயலாமல் போகும் சூழல் ஏற்பட வாய்ப்புள்ளது.
முந்தைய வடிவங்கள் மீண்டும் புழக்கத்திற்கு வரவேண்டும் என்ற அவசியமில்லை. ஆனால், ஆய்வாளர்கள், கல்வியாளர்கள், வரலாற்றாளர்கள், எழுத்துரு வடிவமைப்பாளர்கள், தமிழ் இலக்கியப் பற்றாளர்கள் அனைவருக்கும் இவ்வடிவங்களை உயிரோடு வைத்திருக்க வேண்டிய கடமை உண்டு — தற்கால எழுத்துரு தொழில்நுட்பம் அதை முற்றிலும் எளிதாக்குகிறது.
எழுத்துரு தொழில்நுட்பத்தில் ‘வரலாற்று வடிவங்கள்’
ஒரே எழுத்து அல்லது எழுத்துத் தொடருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வடிவங்களைச் சேர்ப்பது எழுத்துரு தொழில்நுட்பத்தில் புதிதான ஒன்றல்ல. எழுதுவதற்கும் பக்கங்களை வடிவமைப்பதற்கும் பயன்படுத்தப்படும் செயலிகள் பல, விரும்பும் எழுத்து வடிவங்களைத் தேர்ந்தெடுப்பதற்கான வசதிகளைச் செயலிகளின் பயனர் இடைமுகத்திலேயே கொண்டுவரத் தொடங்கியுள்ளன. எண்களுக்கான வடிவங்களைத் தேர்வு செய்வது போலவே எழுத்துகளுக்கான வடிவங்களையும் தேர்வு செய்யலாம்.
அறுபதுகளில் வெளிவந்த பழந்தமிழ்ப் பாடல்கள் அடங்கிய இசை நிகழ்ச்சி ஒன்றுக்குச் சுவரொட்டி உருவாக்க வேண்டும் என்று வைத்துக் கொள்வோம். நிகழ்ச்சிக்கு ‘தேனானத் தமிழிசை மாலை’ என்று தலைப்பிட்டிருக்கிறார்கள் என்றும் வைத்துக் கொள்வோம். இந்தத் தலைப்பில் வரும் னா, லை ஆகிய எழுத்துகளை அக்காலத்தில் வழக்கில் இருந்த வடிவங்களில் அமைத்தால் எவ்வளவு பொருத்தமாக இருக்கும் என்று நினைத்துப் பாருங்களேன்! இவ்வாறு செய்வதற்கு பயன்படுத்தப்படும் எழுத்துரு இடம்கொடுக்க வேண்டும்!
நான் வடிவமைக்கும் எல்லாத் தமிழ் எழுத்துருக்களிலும் முந்தைய உயிர்மெய் வடிவங்களைச் சேர்த்து வருகிறேன். இதற்கு ஓப்பன்டைப் (OpenType) எழுத்துரு தொழில்நுட்பம் பெரிதும் உதவுகிறது. அதில் உள்ள ‘வரலாற்று வடிவங்கள்’ (Historical Ligatures) எனும் கூறு இதற்காகவே ஏற்படுத்தப்பட்ட ஒன்று. ஆப்பிள் கணினிகளில் ஓப்பன்டைப் நுட்பம் வருவதற்கு முன் அவர்களின் சொந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி (Apple Advanced Typography) இந்த வடிவங்களை விருப்பத் தேர்வு வடிவங்களாக ஆப்பிள் கணினிக்கான எழுத்துருக்களில் அப்போதே சேர்த்தேன். இன்று ஆப்பிள் கருவிகளிலும் ஓப்பன்டைப் அழகாக இயங்குகிறது. எனவே ஒரே எழுத்துருவை எல்லாத் தளங்களிலும் பயன்படுத்தலாம்.
விசைப்பலகையில் மாற்றம் எதுவும் தேவையில்லை
முந்தைய வடிவங்களைச் சேர்ப்பதற்குத் தனிப்பட்ட விசைகளோ விசைப்பலகையோ தேவையில்லை. உயிர்மெய் எழுத்துகள் எந்த வடிவத்தில் இருந்தாலும் பொருள் ஒன்றுதான் — வடிவங்கள் மட்டுமே வேறுபடுகின்றன. ஆங்கிலத்தில் ஒற்றை அடுக்கு ‘g’ வடிவத்தையும் இரட்டை அடுக்கு ‘g’ வடிவத்தையும் அதே விசையைக் கொண்டுதான் தட்டெழுதுகிறோம். அதே போல, ‘அண்ணாமலை’ எனும் சொல்லில் வரும் ணா, லை ஆகிய உயிர்மெய் எழுத்துகளைத் தற்கால வடிவத்திலோ முந்தைய வடிவத்திலோ பெறுவதானாலும் அதே விசைகளைக் கொண்டுதான் தட்டெழுத வேண்டும். உரையைத் தட்டச்சு செய்த பின், தேவையான பகுதியைத் தேர்ந்தெடுத்துப் பொருத்தமான எழுத்துரு வசதியைச் சேர்த்தால் போதும் — குறிப்பிட்ட எழுத்துகள் முந்தைய வடிவங்களுக்கு மாறிவிடும்.
காணொலி விளக்கம்
முந்தைய உயிர்மெய் வடிவங்களை வெவ்வேறு செயலிகளில் எவ்வாறு கொண்டுவரலாம் என்பதை விளக்க, சில திரைப் பதிவுகளை உருவாக்கியுள்ளோம். அவை கீழே உள்ள காணொலியில் தொகுக்கப்பட்டுள்ளன. இவற்றைத் தவிர, வெவ்வேறு செயலிகளில் இவ்வடிவங்களைப் பயன்படுத்துவோர் இதுபோன்றத் திரைப்பதிவுகளை எங்களுக்கு அனுப்பினால் மற்றவர்களுடனும் பகிர்ந்துதவ வாய்ப்பமையும். சமூக ஊடகங்களிலும் பதிவிடலாம் – கூடுதல் சிறப்பு. இணைப்புகளை மறவாமல் அனுப்பி வையுங்கள். நாங்களும் பகிர்கிறோம்!