ஓர் எழுத்துருவில் எல்லா எழுத்துகளும் ஒரே அகலத்தோடு இருந்தால் அதனை ‘ஒற்றை அகல எழுத்துரு’ என்று சொல்கிறோம். ஆங்கிலத்தில் இதனை monospace font அல்லது fixed-width font என்று சொல்லுவர்.
தமிழில் ஒற்றையகல எழுத்துருக்களை உருவாக்க முடியுமா என்ற கேள்வி அண்மையில் சென்னையில் நடந்த எழுத்துலா / டைப்டிபன் நிகழ்ச்சியில் கேட்கப்பட்டது. நல்ல கேள்வி. இதற்கு நான் அளித்த பதிலையும், அந்த மறுமொழியின் பின்புலத்தையும் இங்கே பகிர்கிரேன்.
ஒற்றையகல எழுத்துருக்களின் பயன்பாட்டைப் பரப்பியது தட்டச்சுப் பொறிகள்தான். இடைவெளியின் அளவும் எழுத்துகள், எண்கள், குறியீடுகள் இவற்றின் அளவும் ஒன்றாக இருந்ததால், அறிக்கைகள், கணக்குகள் போன்றவற்றை இடைவெளியைக் கொண்டே எளிதாக வடிவமைத்தனர்.

இன்று ஒற்றையகல எழுத்துருக்களின் பயன்பாட்டை நிரலாக்கத்தில் (code editing) பரவலாகக் காணலாம். குறியீடுகளின் வரிசைகளை சரியாக வரிசைப்படுத்தவும், பிழைகளை எளிதாகக் கண்டறியவும் இவை உதவுகின்றன.
தமிழில் ஒற்றையகல எழுத்துருக்களின் பயன்பாட்டை நான் முதன் முதலில் தட்டச்சுப்பொறிகளில்தான் கண்டேன். அதற்குமுன் இவற்றின் தேவை இருந்ததாக எனக்குத் தெரியவில்லை. தட்டச்சுப்பொறியில் அமைக்கப்பட்ட தமிழ் எழுத்துகளின் அளவு இரண்டே வகைதாம்: முதல் வகை அகலமில்லா ‘எழுத்துகள்’. ஆங்கிலத்தில் இவற்றை zero-width keys அல்லது dead-keys என்பர். அகலமில்லா எழுத்துகள் என்றே நாம் சொல்வோமே! இவை முழுமையான எழுத்துகள் அல்ல. புள்ளி, கொக்கி, சுழி போன்ற குறியீடுகள். மற்ற அனைத்து எழுத்துகளுக்கும் ஒரே அகலம்தான். மெய்யெழுத்துகள் வேண்டுமென்றால் முதலில் புள்ளியைத் தட்டி பிறகு அடியெழுத்தைத் தட்டுவோம். புள்ளியைத்தட்டும்போது நகராதக் கட்டம், அடியெழுத்தைத் தட்டியவுடன் நகரும்.
இலத்தீன் எழுத்து வடிவங்களுக்கு ஒற்றையகல எழுத்துருக்களினால் பெரும் இழப்பு ஏதும் ஏற்படவில்லை. ஆனால் தமிழில் பலவற்றை நாம் விட்டுக்கொடுக்க வேண்டியிருந்தது.
தட்டச்சுக்காக வடிவமைக்கப்பட்ட தமிழ் எழுத்துருக்கள் அந்தத் தொழில்நுட்பக் குறைபாடுகளுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்டன. கி, சி, தி, கீ, சீ, தீ ஆகிய எழுத்துகளின் கொக்கிகள் இடுப்பில் இருந்து தொடங்காமல் மூக்கில் இருந்து தொடங்கியதையும் இங்குதான் முதன்முதலில் கண்டேன். ண வரிசையில் உள்ள எழுத்துகள் மிக அகலமாக இருப்பதால் இரண்டு கட்டங்கள் தேவைப்பட்டன.
இந்தக் கட்டுப்பாடு இன்றைய கணினி காலத்தில் இல்லை. தமிழ் எழுத்துகள் எல்லாவற்றையும் ஒரே அகலக் கட்டுப்பாட்டில் வடிவமைக்கவேண்டும் என்ற குறைபாடு நீங்கியது. தமிழில் நிரலாக்கங்களை நாம் செய்வதில்லை. அப்படியே செய்ய விரும்பினாலும் அவை ஒற்றையகல எழுத்துருவில் எழுதப்படவேண்டும் எனும் கட்டுப்பாடும் இல்லை! இன்றய நிரலாக்கத் தொகுப்புச் செயலிகளில் நாம் விரும்பும் எந்த எழுத்துருவையும் சேர்க்கலாம்.
ஒற்றையகல எழுத்துருக்களில், ஒற்றையகலம் எனும் தன்மையைத் தவிர மற்ற சிறப்பியல்புகளைச் சேகரித்து தமிழில் ஓர் எழுத்துருவை அமைத்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்த்தேன்.

திறந்த வளைவுகள் (open apertures), தெளிவான மெல்லிய கோடுகள், குறைந்த நுணுக்கங்கள், சிறிய அளவிலும் எளிதாகப் படிக்கக்கூடிய தன்மைகளோடு ஒவ்வோர் எழுத்துக்கும் தேவையான அகலத்தைத் தந்து வடிவமைத்தேன். இந்த பின்புலத்தில் உருவானதுதான் எமது ‘நுட்பம்’ எனும் எழுத்துரு.
தொழில்நுட்பம் சார்ந்த பயன்பாட்டுக்கு இந்த வடிவமைப்பு உதவலாம் என்பதே நோக்கம். அதற்கு ஏற்றாற்போல், இவ்வாண்டு தொடக்கத்தில் தமிழக அரசின் ஏற்பாட்டில் நடந்த கணித்தமிழ் மாநாட்டின் சின்னத்திற்கு அடுத்துள்ள பெயரையும் இந்த எழுத்தில்தான் வடிவமைத்தேன்.

சின்னத்திற்கு மெல்லிய கோடுகள் பொருந்தாது. எனவே கோடுகளின் தடிமனைக் கூட்டி இன்னொரு பதிப்பை வடிவமைத்தேன். இரண்டோடு ஏன் நிற்கவேண்டும் என்று கருதி ஐந்து எடைகளை இதற்குச் சேர்த்தேன்.
உருவாகிவரும் புதிய முரசு அஞ்சலில் இதுவும் ஒரு புதிய எழுத்துரு!
ஒற்றையகல எழுத்துருக்களின் தேவை ஒரு காலக்கட்டத்தில் இருந்தது. அவை செய்த அதே வேலைகளை ஒவ்வொரு எழுத்துக்கும் தேவைப்படும் அகலத்தைத் தந்து தமிழில் அழகாகச் செயல்பட வைக்கலாம்!
அருமையான தமிழ்க் கணிமைக் கட்டுரை! எழுத்துருக்களைப் பொறுத்த வரை பார்க்கிறோம், அழகாக இருப்பதைத் தரவிறக்குகிறோம், பயன்படுத்துகிறோம் அவ்வளவுதான். ஆனால் ஓர் எழுத்தை வடிவமைப்பதில் எவ்வளவு சிக்கல்கள் இருக்கின்றன என்பதை இதைப் படிக்கும்பொழுதுதான் தெரிகிறது, அதுவும் ஓரளவுக்கு. தமிழின் முதல் தலைமுறைக் கணியெழுத்துத் தீர்வுகளை உருவாக்கிய நீங்கள் இன்றும் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டும், தமிழைச் செழுமைப்படுத்திக் கொண்டும் இருப்பது கண்டு தலைவணங்குகிறேன். தமிழில் பல்லாயிரக்கணக்கான எழுத்துருக்கள் உள்ளன. ஆனால் சில எழுத்துருக்கள் மட்டும்தான் பார்த்தவுடனே கண்ணைக் கவரும். அதில் நீங்கள் உருவாக்கியுள்ள இந்த ஒற்றையகல எழுத்துருவும் ஒன்று.