குழந்தைகளுக்கானத் தமிழ் வளங்களை உருவாக்கும்போது அவற்றின் தலைப்பு எழுத்துக்களில் கொஞ்சம் விளையாட்டுத் தன்மையை சேர்க்கவேண்டும் – இதுதான் நோக்கம்.
அதற்குமுன் தலைப்பெழுத்துக்களைத் தனித்துக் காட்டுவதற்கு அவற்றின் தடிமத்தைப் பெருமளவு அதிகரிக்க வேண்டும். தமிழில் அது ஒரு கரடுமுரடான செயல்! நமது எழுத்துகளில் இழுப்புகள் அதிகம். தடிமத்தைக் கூட்டும்போது எல்லா இழுப்புகளையும் ஒரே அளவில் அமைப்பது கடினம். ஆங்கில (இலத்தீன்) எழுத்துகளிலும் அப்படித்தான் செய்கிறோம் – ஆனால் தமிழில் இந்த வேற்றுமை சற்று அதிகமாகவே தென்படும். மூன்று ஆண்டுகளுக்குமுன் தொடங்கிய இந்த ‘ஆம்பல்’ எழுத்துருவிலும் இந்தத் தடிம மாற்றத்தைச் செய்தேன் – ஆனால் ஒட்டுமொத்தத் தடிமம் இன்னும் போதவில்லை. இன்னும் தடிப்பாக்க வேண்டும் என்று தோன்றியது. என்ன செய்யலாம்?
எழுத்துகளின் வடிவத்தில் கைவைக்காமல் தடிப்பைக் கூட்டுவது கடினம் என்று முடிவானது. குழந்தைகளுக்கான எழுத்துரு. பார்த்தவுடனே இது இந்த எழுத்து என்று எந்த உதவியும் இல்லாமல் அவர்களுக்குப் புரிய வேண்டும். இதனைக் கருத்தில் கொண்டு சில மாற்றங்களை மட்டுமே செய்தேன். இரண்டை மட்டும் இங்கு விளக்குகிறேன்.
முதலாவது: ள, ல, வ, ன போன்ற எழுத்துகளில் தொடக்கச் சுழியை வளைவுகளாக அல்லாமல் முடிச்சுகளாக வரைந்தேன். (knots instead of loops). தாய்லாந்து மொழியில் இந்த வளைவுகளை முற்றாக நீக்கி வடிவமைக்கப்படும் எழுத்துருக்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிவிட்டன. பெரும்பாலும் தலைப்பெழுத்துகளுக்கு இவை பயன்படுத்தப் பட்டு வருகின்றன. Loop vs loopless என்ற கருத்தாடல்கள் எழுத்துருவியல் மாநாடுகளில் அடிக்கடி நடக்கும். சுழிகளை முடிச்சுகளாக மாற்றியவுடன் எழுத்தின் இழுப்புகள் குறைகின்றன. இதன்வழி உள்ளே இருக்கும் வெற்றிடமும் கூடுகின்றது. இழுப்புகளின் தடிமத்தை மேலும் அதிகரிக்க இந்த அணுகுமுறை பெரிதும் உதவியது.

இதைப்போலவே, இகர ஈகாரக் கொக்கிகளிலும் சில மாற்றங்களைச் செய்தேன். இந்தக் கொக்கிகளின் தொடக்க வளைவை குறைத்தேன். முற்றாக நீக்கினேன் என்றும் சொல்லலாம். ஆனால் அவை வளைவுகளாகத் தொடங்க வேண்டும் என்பதைக் காட்டுவதற்காக இடது புறத்தில் இருந்து ஒரு வெட்டு இருப்பதைப் போலக் காட்டினேன். இந்த வெட்டு இருப்பதால், கொக்கியின் தொடக்கம் இடது நோக்கிச் செல்லாமல் நேராக வலதுநோக்கிச் சென்றாலும் இடது நோக்கித் தொடங்குவது போலவே இருக்கும். எழுத்துருவியலில் இதுவும் ஒரு கண்வித்தைதான். இந்த அடிப்படையிலேயே பல இழுப்புகளை எளிமையாக்கி தடிமத்தைக் கூட்டினேன்.
தடிமத்தைக் கூட்டுவதாலேயே இது குழந்தைகளுக்கு உகந்த எழுத்துருவாக மாறிவிடாது. விளையாட்டுத் தன்மையைச் சேர்க்கவேண்டும் என்பதே முதன்மையான நோக்கம். தடிம மாற்றம் அதில் ஒரு கூறுதான். எழுத்துகளை வரையும்போதே இதனைச் செய்துவிடலாம். மற்றவற்றைச் செய்ய எழுத்துருவியல் நுட்பம் உதவியது. இங்கேயும் இரண்டு கூறுகளை விளக்குகிறேன்.
முதலாவது ஒரே எழுத்து அடுத்தடுத்து வருவது தமிழில் இயல்பு. அம்மா, அப்பா, அக்கா, தாத்தா போன்ற எழுத்துகளே போதும். இந்தச் சொற்களில் ம, ப, க, த எழுத்துகள் அடுத்தடுத்து வருகின்றன. முதலில் உள்ள எழுத்தில் புள்ளி இருந்தாலும் புள்ளியின் கீழ் உள்ள வடிவமும் பக்கத்தில் உள்ள வடிவமும் ஒன்றே. இந்த எழுத்துகளில் மாற்று வடிவங்களைச் சேர்த்து ஒரே சொல்லில் அடுத்தடுத்து வரும் அதே எழுத்து வடிவம் மாறுபட்டிருப்பதைக் காட்டினேன். ஆம்பலில் தமிழ் மட்டும் அல்லாமல் இலத்தீன், குருமுகி எழுத்துகளையும் சேர்த்தேன். இவற்றிலும் இந்தத் வடிவ மாற்ற எழுத்துகள் இயங்கும். (தமிழில் உள்ள இகரக் கொக்கியும் குருமுகியில் உள்ள இகர ஈகாரக் கொக்கியும் ஒரே வடிவம்தான் .. படத்தில் பாருங்கள்).

மற்றொரு கூறு இந்த எழுத்தில் உள்ள வரிகளை அசைவுகளாகக் காட்டும்போது தென்படும். நான் சேத்துள்ள காணொலியில் ஒவ்வொரு எழுத்தும் தனித்தனியாக வந்து விழுவதைப் பாருங்கள். மெய்யெழுத்துகளில் புள்ளி தனியாகவும் கீழுள்ள எழுத்து தனியாகவும் விழும். அதுபோலவே இகரக் கொக்கியும் அதன் கீழுள்ள வடிவமும். இவை தனித்தனியாக வந்தாலும் சரியான இடத்தில் குதித்துக் குதித்து உட்காருகின்றன. யூனிகோடும், ஓப்பன் டைப் எனும் நுட்பமும் சேர்ந்து இயங்குவதால் இந்த அழகு நமக்குக் கிடைக்கிறது.
இன்னும் நிறைய உள்ளன. வெளியீட்டின் போது சொல்கிறேன். ஆசிரியர்கள் இந்த முடிச்சுகளையும் அதிகம் சுழிக்காதக் கொக்கிகளையும் ஏற்றுக் கொள்வார்களா என்ற தயக்கம் இருந்தது. வெள்ளிக்கிழமை நான் செய்த படைப்பிற்குப்பின், ஆசிரியர்களிடம் இருந்து கிடைத்த வரவேற்பு மிகப்பெரிய ஊக்கத்தை வழங்கியது. கலையும் நுட்பமும் குழந்தைகளோடு சேர்ந்து விளையாடும் எழுத்துரு இந்த ஆம்பல். வரைதலையும் நிரலாக்கத்தையும் நாமாகவே செய்வதினால் இதுபோன்ற விளையாட்டுகளில் களிப்படையலாம்.
தொடக்கச் சுழியின் முடிச்சுகள் ஈர்க்கின்றன. தமிழ் எழுத்துக்களை விரும்பும் அத்தனைப் பேருக்கும் நிச்சயம் இந்த எழுத்துரு ஈர்ப்பாக அமையும்