அன்றாடத் தொழில்நுட்பத்தில் தமிழ் நுழைந்த கதை – 1

சிங்கப்பூரில் வெளிவரும் சிராங்கூன் டைம்ஸ் மாத இதழின் சூன் 2022ஆம் பதிப்பில் வெளிவந்த அட்டைப்படக் கட்டுரை. இதன் முன்னுரை:

மின்னிலக்க உலகிலேயே பிறந்து வளரும் இன்றைய இளைய தலைமுறையினருக்குக் கணினியிலும் திறன்பேசிகளிலும் தமிழை வாசிப்பதிலோ எழுதுவதிலோ செய்தி அனுப்புவதிலோ பெரிய ஆச்சரியம் இருக்காது. “ஆங்கிலத்தைப்போலத் தமிழும் இருக்கிறது, என்ன பிரமாதம்?” என்று அவர்கள் கேட்கக்கூடும். ஆனால் கணினிக்குள் தமிழ் எழுத்துகள் தானாகப் புகுந்துவிடவில்லை. அதற்கு சுமார் நாற்பதாண்டுகளுக்குமுன் விதைபோட்டவர், இன்றும் தொடர்ந்து அழகிய செடிகளாகத் தமிழெழுத்துகளின் தோற்றத்தை வடிவமைத்து வளர்த்துக்கொண்டிருப்பவர் மலேசியாவின் முத்து நெடுமாறன்.
தமிழ்நாட்டின் உத்திரமேரூரிலிருந்து இவரது தாத்தா மலேசியாவிற்குக் கங்காணியாக வேலைசெய்யப் புலம்பெயர்ந்தவர். இவரது தந்தை முரசு நெடுமாறன் தமிழாசிரியர். தாயார் மலேசியாவிலேயே பிறந்து வளர்ந்தவர். முத்து நெடுமாறன் தமிழ்ப்பற்று ஊறியிருந்த குடும்பச் சூழலில் வளர்ந்தார். அதனால் எதையும் இயல்பாகவே தமிழ்க் கண்ணோட்டத்துடன் அணுகினார். தொடக்கப்பள்ளிக் காலத்திலிருந்தே எழுத்துருக்களின் மீதும் அவற்றின் அமைப்புகளின் மீதும் தணியாத ஆர்வம் கொண்டார். அப்போது கணினி வந்திருக்கவில்லை. பின்னாளில் கணினிப் பொறியியலாளராக ஆனபோது தமிழ் எழுத்துகளைக் கணினிக்குள் கொண்டுவந்தார். இன்று இக்கட்டுரையை நீங்கள் தமிழில் இலகுவாக வாசிப்பதற்குப் பின்னால் முத்து நெடுமாறனின் தீராத ஆர்வமும், தனிப்பட்ட பெருமுயற்சியும், அயராத நெடுங்கால உழைப்பும் மறைந்திருக்கிறது.
எழுத்து வடிவங்களைக் குறித்த தன் இளமைக்கால ஆர்வம், தொழில்நுட்ப வளர்ச்சிக்குத் தக்க தமிழை ஈடுகொடுக்கவைக்க எதிர்கொண்ட சவால்கள், கட்டம் கட்டமாக அடைந்த வளர்ச்சிகள், இன்றைய நிலை, எதிர்காலத் திட்டங்கள் என்று இங்கே நம்மிடம் ஒரு சுவாரஸ்யமான வரலாற்றைப் பகிர்ந்துகொள்கிறார் முத்து நெடுமாறன்.

எழுத்துகளின் வரிவடிவம் என்பதை நான் முதன்முதலில் உற்றுப் பார்த்தது என் தொடக்கப்பள்ளியில்தான் (1968-69). வரிவடிவம் (typeface), எழுத்துரு (font), வடிவமைப்பு (design) இவற்றைக் குறித்தெல்லாம் எனக்கு அப்போது அறவே ஏதும் தெரியாது. என்னுடைய ஆசிரியர் செகு தாமீன் (Chigku Mohn Tamin) ஆங்கில எழுத்துகளை எழுதுவதற்குப் பயிற்றுவித்தார்.

எனக்கு எழுத்துகளின் வடிவத்தைவிட ஆங்கிலத்திலுள்ள 26 எழுத்துகளும் ஒரு செவ்வக வடிவத்திற்குள் சென்று அமர்ந்துவிடும் அழகு ஏதோ மாயாஜாலத்தைப் போல இருந்தது. அவற்றுடன் புழங்கத் தொடங்கினேன். அப்போதே சில சோதனைகளும் செய்தேன் எனலாம். எடுத்துக்காட்டாக, ‘M’ என்ற எழுத்துக்குப் பிற எழுத்துகளைக் காட்டிலும் கொஞ்சம் அதிக இடம் தேவைப்பட்டது. ஆனாலும் அதைப் பிற எழுத்துகளைப் போலவே ஒரே சீரான அளவில் தோன்றச்செய்ய வேண்டியிருந்தது. அதை நானாக முயன்று வரைந்து ஆசிரியரிடம் காட்டினேன்.

என் தந்தையார் ஆழ்ந்த பற்றுள்ள தமிழாசிரியர், அற்புதமான பாடலாசிரியர். இனிமையான சிறுவர் பாடல்கள் பலவற்றை எழுதியுள்ளார். ‘ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்’ என்பதுபோல அவர் பிற பிள்ளைகளுக்குத் தமிழ்ப்பாடம் கற்பிப்பதைக் கேட்டுக்கேட்டு என் தமிழறிவும் ஆர்வமும் தானாகவே வளர்ந்தன. அவர் தமிழ் அமைப்புகளிலும் செயலாற்றினார்.

என் தந்தையின் பெயர், முகவரியைத் தலைப்பில்கொண்ட கடிதத்தாள்களை (letterheads) உருவாக்குவதில் எனக்கு ஆர்வம் அதிகரித்தது. கையால் எழுதுவதற்கு பதிலாக நாளிதழ்களிலிருந்து வெட்டியெடுத்த தனித்தனி எழுத்துகளை வரிசைப்படுத்தி அவற்றை உருவாக்கினேன். அப்போது 70களில் கணினி இல்லை. அன்றைக்கு இருந்த அதிநவீனத் தொழில்நுட்பம் ஒளிப்பிரதி எடுக்கும் இயந்திரம்தான் (photocopier). ஆனால் சாதாரண வெள்ளைத்தாளில் நகல் எடுப்பது போலல்ல. அந்த வசதி பின்னாளில்தான் வந்தது. அப்போது நகல் எடுப்பதற்காகவே தயாரிக்கப்பட்டத் தாள்களைப் பயன்படுத்தவேண்டும். அவற்றில் ஒருவகை வேதிப்பொருள் பூசப்பட்டிருக்கும். அசலில் உள்ள கருமை, நகலிலும் விழ இந்தப் பொருள் உதவும்.

பிறகு ‘லெட்ராசெட்’ (letraset) எனப்பட்ட எழுத்துச் சட்டகங்கள் வந்தன. அவை விலையுயர்ந்தவை, ஒருமுறைதான் பயன்படுத்தலாம். அதுபோன்ற பிரச்சனைகள் ஒருபக்கம் என்றால் அவற்றில் தமிழ் எழுத்துகள் இல்லை என்பதுதான் முக்கியப் பிரச்சனை. அதற்கு ஒரு சுற்றுவழித் தீர்வாக இருந்தது கைகளால் சுற்றிப் பிரதியெடுக்கும் ‘சைக்ளோஸ்டைல்’ (cyclostyle) இயந்திரம். அதன் வெட்டுத்தாளில் (stencil) பேனா போன்ற ஒரு கோலைக்கொண்டு எழுதினால் எழுத்துகள் கீறல்களாக விழுந்துவிடும். அக்கீறல்கள் வழியாக உருளையிலுள்ள மை வெளியேறி எழுத்துகளாக வெள்ளைத்தாளில் படியும். அதோடு ஒவ்வொருமுறை அச்சிட்டு முடிக்கும்போதும் கையெல்லாமும் மை படிந்துவிடும்.

வெட்டுத்தாளிலும் தமிழைக் கையால்தான் எழுதவேண்டும். ஆங்கிலத்திற்கும், ஆங்கில எழுத்துகளைப் பயன்படுத்துவதால் மலாய் மொழிக்கும், தட்டச்சு செய்யமுடிந்தது. அதனால் சைக்ளோஸ்டைல் அச்சுப் பிரதிகள் தெளிவாக இருந்தன. கையால் எழுதும்போது வெட்டுத்தாள் பல இடங்களில் கிழிபடும். பிறகு கிழிந்த இடங்களை ஒருவகை கோந்து வைத்து ஒட்டவேண்டும். அப்போதும் எழுத்துகள் தெளிவாக இரா. இப்படியாக ஏகப்பட்ட பிரச்சனைகள்!

பிறகு ஒரு தமிழ்த் தட்டச்சு இயந்திரம் எங்கள் வீட்டுக்கு வந்தது. சொந்த இயந்திரம் அல்ல, என் தந்தை செயலாளராக இருந்த ஓர் அமைப்புக்குச் சொந்தமானது. மலேசியாவில் மொத்தமாகவே விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் தமிழ்த் தட்டச்சு இயந்திரங்கள் அப்போது இருந்திருக்கும். நான் விரைவிலேயே அதில் தட்டச்சு செய்யத் தானாகவே கற்றுக்கொண்டேன். என் தந்தை பக்கம் பக்கமாக எழுதித் தள்ளிய நாடக வசனங்களை நான் உற்சாகத்தோடு தட்டச்சு செய்தேன். கையெழுத்துப் பிரதிகளிலிருந்து பெற்ற பெரும் விடுதலையை உணர்ந்து அனுபவித்தேன்.

நான் 70களின் பிற்பகுதியில் உயர்நிலைப் பள்ளியில் இருந்தபோது ‘மாணவர் பண்பாட்டு விழா’ ஆண்டுதோறும் கிள்ளானில் நடக்கும். ஆடல், பாடல், கலைநிகழ்ச்சிகளை உள்ளடக்கிய அவ்விழாக்கள் மாணவர்களின் உற்சாகமான பங்கேற்புடன் ஒருமாதம் நடக்கும். மாத இறுதியில் பல போட்டிகளிலும் வெற்றிபெற்றோருக்குப் பரிசுகளும் பாராட்டுகளும் ஒரு விழாவில் வழங்கப்படும். அவ்விழாக்களுக்கு பின்புலத் திரைகளில் பெரிய எழுத்துகளை எழுதவேண்டும். அதில் எனக்கு ஆர்வம் உண்டானது. அச்சில் வந்த பெரிய எழுத்துகளைப் பார்த்து ஓர் எழுத்தில் எங்கே மெலிதாகவும் எங்கே தடிமனாகவும் எழுதினால் தெளிவும் அழகும் கூடும் என்றெல்லாம் ஓரளவுக்குத் தெரிந்துகொண்டேன். அப்போது எழுத்துருக்களில் ‘வேறுபாடு’ (contrast) செய்வது குறித்தெல்லாம் ஏதும் தெரியாது.

அந்தப் பண்பாட்டு விழாக்களுக்கான விழாமலர் உருவாக்கம்தான் என்னை முதன்முதலில் தமிழ் அச்சு குறித்துத் தீவிரமாக சிந்திக்க வைத்தது. மலாய், ஆங்கிலத்திற்கு ஒரு பக்கத்திற்கு 7 ரிங்கிட். ஆனால் தமிழுக்கு 35 ரிங்கிட். ஒருமுறை அச்சுக் கோர்த்துவிட்டால் பிழையாக இருந்தாலும் மாற்றமுடியாது. ஒரேயொரு எழுத்துரு, வரிவடிவம்தான். இதற்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்றொரு வேகம் வந்தது. இந்தத் தடையை உடைத்தால்தான் தமிழில் எழுத்துகள் பெருகும்; தமிழுக்கான இடம் நிலைக்கும் என்றும் தோன்றியது.

பல்கலைக்கழகத்தில் சேர்ந்தபிறகும் அந்த சிந்தனை என்னைத் தொடர்ந்து அரித்துக்கொண்டே இருந்தது. பல்கலையில் முதல் ஆண்டைக் கோட்டைவிட்டேன். ஸ்டீவ் ஜாப்ஸ், பில் கேட்ஸ் இருவரும்கூட அவரவர் பட்டப்படிப்பில் முதல் ஆண்டைக் கோட்டை விட்டவர்களே. ஏனோ அப்படியொரு ஒற்றுமை! அதுபோகட்டும். கணிப்பொறியியலில் பட்டம்பெற்று 1985-இல் நான் வெளிவந்தபோது தமிழ் அச்சுக்கலையை அடியோடு மாற்ற ஏதாவது செய்யவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டேன்.

எண்பதுகளின் பொருளாதார வீழ்ச்சி அப்போது உச்சத்தில் இருந்தது. எவருக்கும் வேலை இல்லை. நல்லவேளையாக எனக்கும் வேலை கிடைக்கவில்லை. அரசாங்க நல்கை பெற்றுப் படித்தவன் என்பதால் வேலை கிடைத்திருந்தால் 10 ஆண்டுகளுக்கு அரசாங்கத்தில் பணியாற்ற வேண்டும் என்ற ஒப்பந்தம் இருந்தது. அவர்களால் வேலை தரவியலாத காரணத்தால் ஒப்பந்தம் முறிந்தது. பேருக்கு வேலைதேடுவதும் மற்றபடி அச்சகங்களில் பயன்படுத்தப்பட்ட உலோக அச்செழுத்துகளை ஆராய்வதுமாக இருந்தேன்.

தனித்தனிப் பெட்டிகளில் எழுத்துகளுக்கான உலோக அச்சுருக்கள் குவிக்கப்பட்டிருக்கும். அவை தலைகீழான வடிவங்களில் இருக்கும். சொற்களுக்கேற்ப அவற்றைக் கோத்து ஒரு செவ்வகச் சட்டத்தில் வரிகளை உருவாக்கவேண்டும். அப்போதுதான் ஒவ்வொரு வரியும் இடப்புறமும் வலப்புறமும் நூல்பிடித்தாற்போல ஓரச்சீர்மையுடன் அமைய வேண்டியதைக் (justification of texts) கவனித்தேன். இன்றும் அவ்வாறே அச்சிடுகிறோம். அவற்றை அழகுக்காக என்று நினைக்கிறோம் ஆனால் அது ஒரு நடைமுறை வசதிக்காக வந்த வழக்கம்; அப்படி இருந்தால்தான் அச்சுக்கோத்தபின் கட்டுகளாகக் கட்டி அவற்றை ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்திற்குக் கொண்டுசெல்ல ஏதுவாக இருக்கும்!

தமிழ் அச்சுருக்கள் குறைவாகவே இருந்தன. விதவிதமான வகைகள் இல்லை. புதிய எழுத்துகள் வேண்டுமென்றால் இந்தியாவிலிருந்து தருவிக்கவேண்டும். விலை அதிகம், கப்பலில் வந்துசேர மாதக்கணக்கில் ஆகும். அதன்பிறகுதான் ‘ஆஃப்செட்’ (offset printing) அச்சிடுதல் வந்து உலோக அச்சுருக்களிடமிருந்து விடுதலை அளித்தது. ஆஃப்செட் செயல்முறை விளக்கத்திற்குள் போகவேண்டாம். ஆஃப்செட் தொழில்நுட்பம் வந்தாலும் மொத்த மலேசியாவிற்கும் தமிழில் ஆஃப்செட் சேவைகள் வழங்கிய ஒரே ஒரு நிறுவனம்தான் இருந்தது. ஆகவே சேவைகளைப்பெற அதிக விலை கொடுக்க வேண்டியிருந்தது.

இங்குதான் கணினியே இப்பிரச்சனைக்கான தீர்வு என்பதை உணர்ந்தேன். ஆனால் கணினிகளுக்குத் தமிழ் தெரியவில்லை. அவற்றுக்குத் தமிழ் கற்றுத்தர முயன்றேன். எனக்குள் அதுவரை உறங்கிக்கொண்டிருந்த கணிப்பொறியாளன் விழித்தெழுந்தான். நான் பயிற்சிப் பொறியாளானாக வேலைசெய்துகொண்டிருந்த நிறுவனத்தில் என் மேலதிகாரி ரிங்கோ லாவ் (Ringo Low) எனக்குக் கணினித்திரையில் எழுத்துகள் வருவதன் நுட்பங்களை விளக்கினார். இன்று என்னுடைய தமிழ் எழுத்துருக்கள், வரிவடிவப் பங்களிப்புகளால் தமிழ்ச் சமூகம் ஏதும் பயன் அடைந்திருக்கிறது என்றால் ஒரு சமூகமாக ரிங்கோ லாவுக்கு நாம் கடன்பட்டிருக்கிறோம் என்பேன்.

ஏகப்பட்ட நுண்சில்லுகள் (microchips) பொருத்தப்பட்ட மின்பலகையில் (விசைப்பலகை அல்ல) எழுத்துகள் திரையில் தோன்றுவதற்கு வழிசெய்த சில்லுகளை எடுத்து அவற்றை இன்னொரு கருவியில் பொருத்தி அது செயல்படும் விதத்தை ஆராய்ந்தேன். கடும் போராட்டங்களுக்குப்பின் ஒருவழியாக நான் அதன் நுட்ப வேலைகளைக் கூர்மையாக உணர்ந்துகொண்டபோது கட்டுக்கடங்காத உணர்வெழுச்சிக்கு ஆளானேன். ஏனெனில் அதேவழியில் தமிழைக் கணித்திரையில் தோன்றச்செய்துவிடலாம் என்ற நம்பிக்கை பிறந்தது. உடனடியாக அந்த வேலையில் இறங்கினேன்.

அங்கும் சில தடைகள் காத்திருந்தன. மொத்தம் 256 பகுதிகள் எழுத்துகளுக்காக அச்சில்லுகளில் ஒதுக்கப்பட்டிருந்தன ஆனால் அவற்றுள் 128 ஏற்கனவே ஆங்கிலத்துக்குப் பயன்படுத்தப்பட்டிருந்தன. மீதமுள்ள 128-இல் தமிழின் 247 எழுத்துகளையும் அடக்கமுடியாது. ஆகவே பல உடைந்த கோடுகளையும் வளைவுகளையும் உருவாக்கி அவற்றை வைத்து ஒன்றுக்கும் மேற்பட்ட தமிழ் எழுத்துகளைத் தோன்றச் செய்யலாம் என்று முடிவெடுத்தேன். ஆனால் அதற்காக நிறைய நுண்சில்லுகள் வாங்கவேண்டும். அவை ஒவ்வொன்றும் அப்போது 35 ரிங்கிட். மேலும் அன்றைய ‘சீமாஸ்’ (CMOS) நிஜமான தொட்டாச் சுருங்கிகள். தவறியும் கைபட்டுவிட்டால் நம் விரல் நுனிகளிலிருக்கும் நுண்ணிய நிலைமின்னதிர்ச்சி தாக்கி அவை செயலிழந்துவிடும்.

பயிற்சிப் பொறியாளனாக இருந்த எனக்கு அப்போது மாத சம்பளமே 300 ரிங்கிட்தான். அது என் போக்குவரத்து உட்படப் பிற அன்றாடச் செலவுகளுக்கே போதவில்லை என்பதால் என் அம்மா ஒரு நாளைக்கு ஒரு ரிங்கிட் கைக்காசு கொடுப்பார். அதில்தான் எனக்குப் பிடித்த ரொட்டிச் சானாய் வாங்கிச் சாப்பிடுவேன். அந்த ஒவ்வொரு ரிங்கிட்டைச் சேர்த்துவைத்து 35 நாட்கள் கழித்து ஒரு நுண்சில்லு வாங்குவேன். அப்படியாகக் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி நான் வடிவமைத்த புதிய சில்லுகளை என் ஆய்வுக்கூடத்தில் இருந்த ஆப்பிள் கணிப்பொறிக்குள் பொருத்திவிட்டேன்.

இப்போது வன்பொருள் தயார் ஆனால் மென்பொருள் தேவை. அப்போதுதான் விசைப்பலகை உள்ளீட்டைக் கணிப்பொறி என் சில்லுக்கேற்ப புரிந்துகொள்ளும். விசைப்பலகை உள்ளீட்டு இயக்கிகள் ‘பொருத்து மொழி’ (Assembly Language) என்று சொல்லக்கூடிய, உள்ளதிலேயே ஆகக்கடினமான மொழியில் இயங்கின. இப்போது எவருக்கும் அம்மொழி தெரியாது. அந்த மொழியில்தான் ஆயிரக்கணக்கான வரிகள் அடங்கிய மென்பொருளைப் பக்கம்பக்கமாக எழுதினேன்.

எல்லாம் முடிந்து விசைப்பலகையில் ‘தமிழ்’ என்று உள்ளிட்டதும் அது அப்படியே திரையில் ‘தமிழ்’ என்று மின்னியதைப் பார்த்த அக்கணத்தை சொற்களில் விவரிக்க என்னால் இயலாது. இன்றும் அத்தருணத்தை நினைத்தால் உணர்ச்சிவசப்பட்டுவிடுவேன். ஏதோ ஒரு மாலை வேளையில்தான் அது நடந்தது. எங்காவது தேதியைக் குறித்து வைத்திருந்திருக்கலாம் ஆனால் பொறியாளர்களின் மனம் ஏனோ அப்படியெல்லாம் இயங்குவதில்லை. பிரச்சனை தீர்ந்தால் சரி.

மலாயாப் பல்கலைக் கழகத்தில் 1986-இல் நடந்த ஆறாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் ஓர் ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டுத் தமிழைக் கணினியில் உள்ளிட்டுத் திரையில் காட்டியபோது உலகெங்கிலும் இருந்து வந்திருந்த ஆய்வாளர்கள் வியப்படைந்து என்னை மொய்த்துக் கொண்டனர். எழுதிய எழுத்தை எந்தச் சிரமமுமின்றி ஒரே சொடுக்கில் அழிக்கலாம், அழித்த அதே இடத்தில் புதிய எழுத்தை எழுதலாம், பாதி எழுதிய கோப்பைச் சேமித்து வைத்து பிறகு இன்னொரு நாள், ஏன் இன்னொருவருக்குக்கூட அனுப்பி அவர் தொடரலாம் போன்ற வசதிகள் இன்று பெரிய விஷயங்களில்லை. ஆனால் அன்று அவை அற்புதங்கள்!

என் முயற்சியில் இருந்த தனிச்சிறப்பு என்னவென்றால், தமிழில் எழுதுவதற்குத் தனியாகத் தமிழ்ச் செயலிகள் தேவை இல்லை. ஆங்கில செயல்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படும் அதே செயலிகளைக் கொண்டு தமிழிலும் செயல்படுத்தலாம். எனது தொடக்ககால முயற்சிகள் இந்த அடிப்படையிலேயே தொடங்கின, இன்றும் அவ்வாறே நடைபெறுகின்றன.

சரி, தமிழ் கணினிக்குத் தமிழ் கற்றுத் தந்தாகி விட்டது. அதாவது கணித்திரைக்குள் தமிழ் வந்துவிட்டது. ஆனால் தாளில் அச்சிடுவது எப்படி? அங்கு அடுத்தகட்ட சவால் காத்திருந்தது.

அப்போது ‘டாட் மேட்ரிக்ஸ்’ (Dot Matrix) அச்சுப்பொறிகள் இருந்தன. அவை 9 அல்லது 27 மின்குச்சிகளைக் (pins) கொண்டிருந்தன. இக்குச்சிகளை மென்பொருளைக்கொண்டு கட்டுப்படுத்தலாம். எழுத்தின் வடிவத்திற்கேற்ப இக்குச்சிகள் வெளியேவந்து மையைத் தாளில் அச்சிடும். ஒருமுடிவோடு, முன்பு கணித்திரைக்குச் செய்தது போலவே, ஆங்கில எழுத்துகள் எப்படி அச்சுப்பொறிகளில் அச்சாகின்றன என்பதை ஆராய்ந்தேன்.

ஒவ்வொரு எழுத்தும் பல புள்ளிகளால் ஆனது என்பதையும் ஒவ்வொரு புள்ளிக்கும் இடம் வரையறுக்கப்படுகிறது என்பதையும் கண்டேன். அத்தகவல்கள் அறுபதின்ம எண்ணமைப்பில் (hexadecimal system) சேகரிக்கப்பட்டிருந்தன. பத்து என்ற எண்ணை அடிப்படையாகக்கொண்ட நமக்குப் பழக்கமான கணிதத்தைப்போல இது 16 என்ற அடிப்படையாகக்கொண்ட எண்ணமைப்பு. கணிப்பொறியியல் கற்றிருந்ததால் இவற்றை எளிதாக விளங்கிக்கொண்டேன்.

ஆங்கில எழுத்துகளுக்கான புள்ளிகளைப் போலவே தமிழ் எழுத்துகளுக்கான புள்ளிகளுக்கேற்ப அறுபதின்ம எண்ணமைப்பில் மென்பொருள் தயாரித்து உள்ளிட்டேன். அதோடு தமிழைக் கணினியில் உள்ளிட்டுக் கையோடு அச்சுப்பொறியில் அச்செடுத்துவிடவும் முடிந்தது. அதை ஒரு புரட்சி என்றுதான் சொல்லவேண்டும். என் தந்தையின் பாடலொன்றை முதன் முதலாகக் கணினியிலேயே உள்ளிட்டு அச்சிட்டேன். அது ‘கணினியின் பயன்’ என்ற பாடல்!

அப்பாடலின் கடைசிப்பத்தியை,

“தமிழிலும் கணினி உண்டுபார்!
தயக்கம் எல்லாம் ஓடவே!
நமதரும் மொழியிலும் கணினியால்
நல்ல பயன்களைக் காணுவோம்!”

என்று முடித்திருந்தார்.

பாடலின் வரிகளுக்குப் பயன்படுத்திய எழுத்துருவைக் காட்டிலும் பாடலின் தலைப்பிற்குப் பெரிய எழுத்துகள் வேண்டுமே என்று யோசித்தேன். ஒவ்வொரு சாதாரண எழுத்தையும் இரண்டு மடங்காக்குவதற்கு ஒரு மென்பொருளை எழுதி அதைத் தலைப்பு எழுத்துகளுக்குப் பயன்படுத்தினேன். சாய்வெழுத்து, பெரிய, சிறிய எழுத்துகள் என ஏகப்பட்ட சாத்தியங்களை ஒரு குழந்தையின் குதூகலத்துடன் செய்துகொண்டிருந்தேன். அது 1980களின் இறுதிக்காலம்.
அந்தக் காலகட்டத்தில்தான் ‘லேசர்’ (Laser) அச்சுப்பொறிகள் கட்டுப்படியாகும் விலையில் வர ஆரம்பித்தன. ஆப்பிள், ஹெச்பி (HP) ஆகிய இரு நிறுவனங்களும் லேசர் அச்சுப்பொறிகளை வெளியிட்டன. இரண்டிலும் அச்சிடும் முறைகள் வெவ்வேறானவை. இங்கு தமிழைக் கொண்டுவரவேண்டிய அடுத்த சவால் எழுந்தது. புதிய தொழில்நுட்பம் குறித்து அறிந்துகொள்ள இணையம் இல்லாத காலகட்டம் என்பதால் ‘BYTE’ என்ற மாதாந்திர சஞ்சிகையை வாங்கிப் படித்துக்கொண்டிருந்தேன். அதில் புதிய வன்பொருள், மென்பொருள், மின்சுற்று வடிவமைப்புகள் குறித்த விவரங்கள் வந்துகொண்டிருந்தன.

அதைப்படித்துத் தெரிந்துகொண்டு லேசர் அச்சுப் பொறிகளுக்கான தமிழ் எழுத்துருக்களை உருவாக்கினேன். ஐந்தரை அங்குல வட்டுகளில் (அதுதான் அப்போது ஆகப்புதிய தொழில்நுட்பம்) சேமிக்கப்பட்டிருக்கும் அவ்வெழுத்துருக்களை கணினியில் தரவிறக்கிக்கொண்டு தமிழை அழகாக அச்சிட்டுவிடலாம். தமிழ் சஞ்சிகைகள் என்னுடைய தொழில்நுட்பத்தைக் கைக்கொள்ள ஆரம்பித்தன.

சஞ்சிகை நடத்துவது ஒரேயடியாக எளிமையாகிப் போனது. ஒரேயொரு ஆள் இருந்தால் போதும் ஒரு சஞ்சிகை நடத்திவிடலாம் என்ற நிலை வந்தது. மலேசியாவின் ‘மயில்’ சஞ்சிகைதான் முதலில் துணிச்சலுடன் என் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அச்சிட்டனர். பழைய அச்சுத் தொழில்நுட்பத்தோடு ஒப்பிடும்போது புதிய முறையில் தமிழ் எழுத்துகள் தெளிவுடனும் திருத்தமாகவும் இருந்ததால் வாசகர்கள் விரும்பினர். ‘மயிலை’த் தொடர்ந்து பலரும் பின்பற்ற ஆரம்பித்தனர்.

என் கணினித்தமிழ் அச்சுருக்களைப் பயன்படுத்த முன்வந்த முதல் நாளிதழ் மலேசியாவின் ‘தமிழ் ஓசை’. நான் அவர்களுடைய கூட்டத்திற்கு அழைக்கப்பட்டேன். ரேடியோ பாலா, ஆதி குமணன் போன்ற பெரிய ஆட்கள் பலர் அங்கு இருந்தனர். நான் பெரும் பதற்றத்திற்கு ஆளானேன். ஒவ்வொரு நாளும் சிக்கல் ஏதுமில்லாமல் 16 பக்கங்கள் வெளியிடும் அளவுக்கு என் தமிழ்த் தொழில்நுட்பத்தை ஆக்கவேண்டுமே என்ற பதற்றம். அவர்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் ‘அதெல்லாம் செய்துவிடலாம்’ என்கிற ரீதியில் பதில் சொல்லிக்கொண்டிருந்தேன். அப்போது ரேடியோ பாலா, “தம்பி, எவ்வளவு ஆகும்? எப்ப கிடைக்கும்?” என்று நேரடியாக விஷயத்திற்கு வந்தார்.

ஒருவாரம் வேலைக்கு விடுப்பு எடுத்துக்கொண்டு நாளிதழ் அலுவலகத்திலேயே இராப்பகலாக வேலைசெய்ய ஆரம்பித்தேன். பல்வேறு பிரச்சனைகள் எழுந்தாலும் அவற்றைக் கூடியமட்டும் உடனுக்குடன் சரிசெய்தேன். கொஞ்சம்கூட முகஞ்சுளிக்காமல், வேண்டாவெறுப்பாக அல்லாமல் அவர்கள் அப்போது அளித்த ஒத்துழைப்பை மறக்கமுடியாது. அச்சின் எதிர்காலம் இதுதான் என்பதை அவர்கள் உணர்ந்திருக்க வேண்டும்.
அத்தனை சிக்கல்களுடனும் குறைகளுடனும் பழைய அச்சுத் தொழில்நுட்பத்தைக் காட்டிலும் புதியமுறை ‘பிட்மேப் லேசர் எழுத்துரு’ (Bitmap Laser Font) மேம்பட்டிருந்தது. அதன்பிறகு மலேசியா, சிங்கப்பூரில் தமிழ் அச்சிடப்பட்ட விதம் அடியோடு மாறிப்போனது. பள்ளிப்பாட நூல்கள் இம்முறையில் அச்சிடப்பட்டன.

பிறகு 1993-இல் நான் சிங்கப்பூருக்கு வேலை நிமித்தம் மாற்றலானேன். விமானத்திலேயும் விமான நிலையங்களிலும் பெரும்பொழுது கழிந்தது. தமிழுக்கான என் நேரம் அருகிப்போனது. அப்போதுதான் இணையப் புரட்சி தொடங்கியது. பலரிடமும் மின்னஞ்சல் முகவரிகூட இல்லாத காலம்தான் என்றாலும் ஒரு பெரிய மாற்றம் நடக்கப் போவதற்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்திருந்தன. அன்றைய இணையத் தகவல் பரிமாற்றங்களில் 93 விழுக்காட்டைக் கையில் வைத்திருந்த ‘சன் மைக்ரோசிஸ்டம்ஸ்’ பெருநிறுவனத்தில் வேலை செய்ததால் எனக்கு அது இன்னும் துலக்கமாகவே தெரிந்தது. ‘டாட் காம்’ என்பதில் இருக்கும் ‘டாட்’ நாங்கள்தான் என்று அந்நிறுவனம் பெருமையாகச் சொல்லிக்கொண்டது.

அப்போது எனக்கு மின்னஞ்சலைப் பயன்படுத்தும் போதெல்லாம், என் வழக்கமான பார்வையினால், ‘இதில் ஏன் தமிழ் இல்லை?’ என்ற கேள்வி எழுந்துவந்து உறுத்திக்கொண்டே இருந்தது. வலைப்பக்கம் என்றாலே ஆங்கில எழுத்துகள்தாம். மின்னஞ்சல் என்றாலும் அப்படியே. சீன, ஜப்பானிய, கொரிய வலைமனைகள் கொஞ்சம் இருந்தன என்றாலும் தமிழ் அறவே கிடையாது. தமிழை வலையேற்றியே தீருவது என்று கங்கணம் கட்டிக்கொண்டேன்.

(தொடரும்)

Leave a Reply